Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

ஹட்டன் குறிப்புக்கள்.

ஹட்டன் குறிப்புக்கள்- 1
இலக்கிய சந்திப்புக்கு முதன்னாள் இரவு பத்து மணியளவில் A9 வீதியில் பயணம் தொடங்கியது. ஹட்டன் கொட்டகலையில் தான் இலக்கிய சந்திப்பு என்று அறிவித்தல் வந்த போது, கொட்டகலையின் பெயர் என்னுடைய அப்பாவோடு மிகவும் நெருங்கியதாக இருந்தது, இதுவே அவரைச் சம்மதிக்க வைக்கவும் செய்தது. அப்பா படித்த ஆசிரியர் கலாசாலை கொட்டகலையில் தான் இருந்தது. கிளம்புவதற்கு முதலே அப்பாவின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான லெனின் மதிவானம் அவர்களுக்கு நான் வருவதாக அறிவித்திருந்தார். அவருக்கென தேனும் ஒடியலும் பத்திரப்படுத்தி தந்தார். இலக்கிய சந்திப்பிற்க்கு செல்லவேண்டும் என்ற மனநிலை யதார்த்தனின் சிறுகதை தொகுப்பின் அறிமுக நிகழ்வு நடகின்றது என்பதனாலேயே ஏற்பட்டது. அது சோபிக்காமல் குறுக்கப்பட்டது வேறு விடயம். இலக்கியத்தில் சோபித்தல் நீட்சி போன்ற அலங்காரங்களை எதிர்பார்க்க முடியாது தானே. பத்து பன்னிரண்டு பஸ்களுக்கு பின்னர் ஹட்டன் யாழ்ப்பாணம் பஸ் வந்தது. பஸ்ஸின் முன்னால் நின்றவர் ஏறுங்கள் ஏறுங்கள் என்றபோது எதையும் யோசிக்காமல் ஏற முனைந்தேன். எதற்கும் “ஹட்டன் தானே?”, “கொழும்பு” அப்படியே பின்னோக்கி கையினை அசைத்து அனுப்பிவிட்டு, சரியாக பன்னிரண்டாவது பஸ்ஸில் மிகுந்த கவனத்துடன் ஏறினேன். முன்னாலே கிரிசாந்த் இருந்து சிரிக்க, தூக்கமுடியாமல் பயணப் பையினை தூக்கிக்கொண்டு கடைசி ஆசனங்களை வந்து அடைந்தேன். தெரிந்த முகங்கள் பாதி தெரியாத முகங்கள் மீதியென்று கூட்டத்தில் கலந்து கொண்டேன். தேனும் ஒடியலும் பத்திரமாக பயணப்பைக்குள் இருப்பதை உறுதி செய்யுமாறு, பாதுகாப்பாக வைத்தேன்.
ஹட்டன் குறிப்புக்கள்- 2
குளிரும் என்பதை தவிர ஹட்டன் பற்றிய எந்த சித்திரமும் என்னிடம் இல்லை. ஹட்டனில் இருந்து எட்டாம் ஒன்பதாம் ஆண்டுகளில் நவீன் என்ற நண்பன், என்னோடு வவுனியாவில் எங்கள் பாடசாலையில் படித்தான். இந்த பயணம் முழுவதிலும் அவனைப் பற்றிய எண்ணமே வரவில்லை. எழுதத் தொடங்கியபோது தான் நினைவில் பளிச்சிட்டான். அவனின் ஓரிரு வார்த்தை, முடியுமானால் ஒரு சிறு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கலாம். சந்தர்ப்பம் நழுவிப் போய்விட்டது. சிறிது நேரம், கிட்டத் தட்ட ஒரு ஐந்து நிமிடம்.- இறுதி ஆசனத்தில் இருந்து பின்னர் முன்னோக்கி இரண்டு ஆசனங்கள் தாண்டி, உறுதியாக எனது இருப்பிடத்தை தெரிந்து கொண்டேன். இடது பக்கம் கலைமுகம் இலக்கிய இதழின் பிரதம ஆசிரியரும் வலது புறம் அறிமுகம் இல்லாத ஒருவரும் இடையில் நானும் அந்த மூன்று ஆட்கள் ஆசனத்தில் இருந்தோம். கலைமுகம் ஆசிரியருடன் அறிமுகமான போது, மனதில் மெல்லிய குற்றவுணர்வு ஏற்பட்டது. கலைமுகத்தின் ஒரே ஒரு இதழை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். உண்மையில் வைத்திருக்கிறேன். இரெண்டொரு கட்டுரைகள் வாசித்த ஞாபகம். அவர் கடைசி இதழை வாசித்தீர்களா? எப்படி இருந்தது? என்று குழந்தைத் தனமாக கேட்டபோது இன்னும் குற்றவுணர்ச்சி அதிகமானது. சிறு மௌனத்தின் பின்னர், நான் வாசித்த ஒரே ஒரு இதழின் அட்டை வண்ணத்தை ஞாபகத்திலிருந்து சொல்ல, அவர் அதற்கு பின்னர் இரண்டு இதழ்கள் வெளிவந்து விட்டதாக சொன்னார். சமகால இலக்கிய அவதானிப்பு இருந்தும் அவற்றை தவற விட்டதும், அவர் அருகில் அதற்கு பின்னர் எப்படி இருப்பது என்றும் கவலை தொற்றியது. அவர் வவுனியாவிற்கு இரண்டையும் தான் அனுப்பவில்லை என்றபோது கவலை விலகியது. கூடவே, இன்றைய நாட்களில் கலைமுகம் முன்னையதை விட அதிகமாக விற்பதாகவும், வாசகர் பரப்பு கூடியிருப்பதாகவும் சொன்னார். நான் கொஞ்சம் பூரித்துப்போனேன். அவர் “ நீங்க எங்களுக்கு எழுதுங்களேன்” , பூரிப்பு இருமடங்காகியது. அவரிற்கு மீண்டும் ஒரு மௌனத்தால் விடையளித்தேன். இரண்டு மௌனங்களும் வேறு வேறானவை.
ஹட்டன் குறிப்புக்கள்-3
வலது பக்கம் இருந்தவருக்கும், அவரின் இருக்கைக்கு முன்னால் இருந்தவருக்கும் பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. பிரச்சனை ஜன்னல் திறப்பது சம்பந்தமானது. இவர் திறப்பதும் அவர் மூடுவதும் பின்னர் இவர், அவர் என்று நடந்துகொண்டே இருந்தது. இதிலிருந்து அவர் இலக்கிய சந்திப்பிற்கு வந்திருக்க மாட்டார் என்பதை யூகித்துக் கொண்டேன். உண்மையும் அதுதான். அவர் பக்கம் இருந்த நியாயம், அவரிற்கு எப்போதும் துப்பிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால் ஜன்னல் திறந்திருக்கவேண்டும். முன்னால் இருந்தவர் பக்க நியாயம், என்னருகில் இருந்தவர் ஜன்னலை திறந்தே வைத்திருக்க சம்மதம், ஆனால் அவர் கணத்துக்கு கணம் ஜன்னலின் அளவை மாற்றிக் கொண்டே இருப்பது அசௌகரியம். யார் பாக்க நியாயம்? இதில் குழப்பம் ஏதும் இருக்காது. ஆனால் ஹட்டனில் இருந்து திரும்பி வரும்போது, 27ஆம் இலக்க ஆசனம் அதுவும் நடு ஆசனம் தான். யாருமே இருபுறமும் இல்லை. பயணப்பையை ஆசனத்தில் வைத்துவிட்டு, சூடாக வடையும் கிழங்கும் சாப்பிட இறங்கினேன். 7.20 இரவு, சரியாக பஸ் எடுத்துவிடுவார்கள் என்பதற்காக ஐந்து நிமிடம் முன்னரே வந்து சேர்ந்து விட்டேன். பெரிய இருக்கையின் கரையில் என்னைப்போல ஒன்றரை மடங்கு பெரிய உருவம் கொண்ட ஒருத்தர் இருந்தார். நான் நடுவில். கிட்டத்தட்ட இரண்டரை ஆசனங்கள் நிரம்பி விட்டநிலையில், மூன்றாமவர் யார் என்ற ஆவல் கூடியது. பயமும். சற்றுப் பெருத்தவர்கள் 29ஆம் இலக்க இடத்தை நோக்கி வரவும், அதைத் தாண்டிச்செல்லவும் பயம் வருவதும் கடப்பதாகவும் இருந்தது. பின் ஆசனத்தில் இருந்த சதீஸ் அண்ணா, என்னை மிகவும் கவனித்தவராய் எனது இன்னல்களை சிலாகித்துகொண்டு இருந்தார். ஒரு இருபது நிமிடங்கள் அந்த ஆசனத்தில் என் பயணப்பை மட்டமே இருந்தது. இப்போது இடத்திற்கான குழப்பம் அதிகமானது. அதில் இப்போது தேனோ ஓடியலோ இல்லை. அதற்கு பதிலாக சில புஸ்தகங்களே நிரம்பியிருந்தன.
ஹட்டன் குறிப்புக்கள்- 4
வலப்பக்கம் அறிமுகம் இல்லமே கடைசிவரை போனது. நான் அறிமுகம் செய்துகொள்ள விரும்பவில்லை. அவருக்கு அறிமுகம் செய்துகொள்ள நேரம் இல்லை. சொன்னது போல நிமிடத்திற்கு பத்து முறையாவது கடைசி துப்பிக்கொண்டே இருந்தார். ரபான் சத்தம் மெதுவாக கேட்க தொடங்குகிறது. வவுனியாவில் என்னையும் சதீஷ் அண்ணாவையும் ஏற்றும் வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாடல் கேளிக்கைகள் ஆரம்பம் ஆகியது. அதோ அந்தப் பறவை போல என சதீஸ் அண்ணா ஆரம்பிக்க கிரிசாந், யதார்த்தன், நண்பர்கள் என சேர்ந்துகொண்டனர். சிங்களப் பாட்டு பஸ்ஸில் ஒலிக்க அதற்கு மேலாக அவர்கள் பாடத் தொடங்கினார்கள். பழைய பாட்டுகளும் பின்னணி முணுமுணுப்புகளும் என்று பஸ் வேகத்தைக் கூட்டியது. சிறிது நேரத்திலேயே மதவாச்சியில் இரவு உணவுக்காக நிறுத்தியது. பின்னர் மீண்டும் கிளம்பிய பஸ்ஸில் பாடிய நினைவோ ரபான் சத்தம் கேட்ட நினைவோ இல்லை. நித்திரை கண்டியில் தான் முறிந்தது. மனமெல்லாம் குளிர்ந்து. அருகில் இருந்தவர் அப்போதும் துப்பிக்கொண்டு தான் இருந்தார். நித்திரை கொண்டாரா? இல்லையா? நித்திரையிலும் துப்புவாரா? அல்லது சேமித்து எழுந்தவுடன் துப்புவாரா? இல்லை துப்புவதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறாரா? கையில் புத்தகமோ அல்லது காதில் ஹெட்ஃபோன்கள் போட்டிருந்ததையோ அல்லது தொலைபேசியை நோன்டிக்கொண்டதையோ நான் காணவில்லை. கண்டியிலிருந்து பஸ் ஹட்டனுக்கு புறப்பட்டது. நித்திரை. கண்டியிலேயே மழை ஆரம்பித்திருந்தது. ஹட்டனில் தொடர்ந்தது. அதிகமாவே இருந்தது. பின்னர் வட்டவளை என்கிற கூடிய மழைவீழ்ச்சி உடைய நகரம் அருகில் இருப்பதை தெரிந்துகொண்டேன். பஸ்நிலையத்தில் இறங்கி மழைக்குள் புஸ்தக கட்டுகளை தூக்கிக்கொண்டு, சூடான தேநீருடன், போகவிருந்த இடத்திற்கு டால்பின் ஒன்றினுள் நெருக்கமாக போய்ச்சேர்ந்தோம். ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரில் டால்பின் நின்றது. டொல்பினுக்குள் நெருக்கமாக இருந்ததால் ஹட்டனின் புறச் சூழலை அவதானிக்க முடியாமலே போனது. இருந்தும் அப்பா கொடுத்து விட்ட தேனும் ஒடியலும் கவனாமாக இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக்கொண்டேன். ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றர்.
ஹட்டன் குறிப்புக்கள்- 5
‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரில் இறங்கும் போதும் மழை தூறலாக பெய்தது. புஸ்தக கட்டுகளையும் பயணப்பைகளையும் டொல்பினில் இருந்து இறக்கி வைத்தோம். முதன் முதலாக ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரை இரண்டு கண்களையும் அகல விரித்து பார்த்தேன். குழந்தைகள் building blocksஐ அடுக்கி விளையாடியது போன்ற நிலதோற்றத்தை ‘கிறீன்ஹில்’ ரிட்ரீட் சென்றரும் சூழலும் கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே உணவகமும் பின்னர் அருகாமையால் இறங்குகின்ற படிகளற்ற பாதையும் முடிவில் ஒரு வீடும், திரும்பி மீண்டும் இறங்கும் போது எதிரே நீண்ட பெரிய இரண்டு மாடி மண்டபமும் சிறிய சமவெளியும் இறக்கத்தின் வலது பக்கம் தடிகளால் அந்தரத்தில் செய்யப்பட்ட கதைப்போர் கூடமும், அதற்கு எதிரே சீமெந்து பூசப்பட்ட மீன் தொட்டியும் அதற்குள் மீன்களும், இறங்கி சமதரையை அடைந்தது நீண்டு கூர்மையாக வளர்ந்த பெயர் தெரியாத மரம், அதைத் தாண்டி பறந்து விரிந்த பச்சை நிற சாயம் வீசப்பட்ட தேயிலை மலையும் சமதரைக்கும் மலைக்கும் இடையில் மஞ்சள் நீரோடும் கால்வாயும் தெரிந்தது. கால்வாய் நீரின் சத்தம் ஆக்ரோசமான மக்கள் கூட்டம் எதற்காகவோ போராடுவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது. மஞ்சள் நீரோடும் கால்வாய் என்று என்னால் அவதானிக்கப்பட்டது, சிறிது நேரத்தின் பின் பலதரப்பட்ட பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. முக்கியமாக அதை ஒரு நதி என்றும் கண்ணுக்கு எட்டும் தூரத்தி தெரிகின்ற சிறிய நீர்வீழ்ச்சி போன்ற தோற்றமுடைய அமைப்பிலிருந்து இறங்கி வந்து பாய்கின்றது எனவும் பேசப்பட்டது. சில மணித்தியாலங்களிலேயே மஞ்சள் நீர் தெளிவானது. ஓட்டமும் குறைந்தது. கடைசி வரையும் நின்று விடவில்லை. சிலர் நீர்வீழ்ச்சி போன்ற தோற்றப்பாட்டை உடைய இடத்தில் குளித்ததாகவும், இன்னும் சிலர் அந்த நீரை அருந்தி (தெளிந்த பிறகு) அதை புகைப்படமும் எடுத்து முகப் புத்தகத்தில் போட்டதாகவும் அறிந்தேன். இதன் மூலம் இதை நதி என்று முடிவு எடுத்துவிடுவதா? அல்லது சிறிய கால்வாய் தானா? ஹட்டனின் வேறு எங்கும் சென்றிறாததால் அந்த அமைப்பு கடைசி வரையும் மர்மமாகவே இருந்தது. இப்போது கூகிள் மப்பில் தேடிய போது அங்கு கால்வாய் இருந்ததாகவோ நதி இருந்ததாகவோ எந்த அடையாளமும் இல்லை. ஆனால் street view இல் பார்க்கும் போது தெரிகின்றது. இன்னும் அந்த மஞ்சள் கால்வாய் மர்மம் தான்.

ஹட்டன் குறிப்புக்கள்-6
இரண்டு மாடி மண்டபம், சமதரை அடுத்து நீண்ட இரண்டுமாடி தங்குமிடம். எமக்கான அறைகள் தரப்பட்டன. மொத்தம் மூன்று அறைகளை பயன்படுத்த முடியும் என்றார்கள். கடைசியில் ஆறு ஏழு அறைகளை பயன்படுத்தினோம். ஒரு அறையில் நான்கு கட்டில்கள். இரண்டு கீழே இரண்டு அதற்கு மேலே. ஜன்னலைத் திறந்தால் இரண்டடி தூரத்தில், உண்மையில் அருகில் மஞ்சள் நீர்க் கால்வாய் ஓடியது. கால்வாயையும் இடையில் இருந்த இரண்டடி சீமெந்து நிலத்தையும் அவதானித்தபோது தான் அட்டைகள் பற்றிய ஞாபகம் வந்தது. மலையகப் பகுதிகளில் அட்டைகள் இருக்கும் என்பதை நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது சென்றிருந்த சுற்றுலா ஒன்றின் மூலமாகவே அறிந்திருந்தேன். நாங்கள் சென்ற பஸ்ஸிற்குள்ளேயே அட்டைகள் ஏறின. கீழ் கட்டிலில் படுத்தால் எவ்வளவு நேரம் ஆகும் ஏற என மேல் கட்டிலையே தெரிவு செய்தேன். பயணப்பையை இறக்கி வைத்துவிட்டு கொண்டு வந்த புஸ்தக கட்டுகளை அவிழ்த்து ஈரம் பற்றியுள்ளதா என பார்த்தோம். புதிய சொல்லும் மேடுசாவும் பிரெஞ்சு புரட்சியும் கவனமாக இருந்தது. தேனும் ஒடியலும் கூட. முதலாவதாகவே முந்நூரு ரூபாய் கொடுத்து மெடுசாவின் கண்கள் முன்னே நிறுத்தப்பட்ட காலத்தின் ஒரு பிரதியை வாங்கி வைத்துக்கொண்டேன். விடியற்காலை ஏழைத் தாண்டியிருந்தது. குளிர் மிதந்து வந்து உடலெல்லாம் சூழ்ந்தது. உண்மையில் இத்தனை புதிய அனுபவங்களுக்கிடையில் யார் எம்மை முதலில் வரவேற்றார்கள் யார் வழிகாட்டினார்கள் என்று எதையுமே கவனிக்கவில்லை. முதலிலேயே குளிக்கசென்று நீரினால் துடைத்துக்கொண்டு வந்த யதார்த்தன், இனி குளிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார். இறுதியாக நான் துவாயையும் சவர்க்காரத்தையும் தூக்கிக்கொண்டு மண்டப முடிவில் இருந்த குளியல்அறைக்குள் சென்றேன். குளியலறையும் கழிப்பறையும் மிகவும் சுத்தமாக இருந்தது. இருந்தும் என்ன பயன் குளிக்க வேண்டுமே! குளித்தேன். முதலில் குளிர்ந்து, பின்னரும் கூட.
ஹட்டன் குறிப்புக்கள்- 7
அங்கு எனக்கு வியர்க்கவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் உணவகத்துக்கு ஏறும் போதும் மூச்சு வாங்கியது. பலகீனமானவனாகத் தெரிந்தேன். உண்மையில் புதிதாக அந்த சாய்வில் ஏறுபவர்கள் எல்லோருமே பலகீனமானவர்கள். 9.30ற்கு நிகழ்வுகள் தொடங்கும் என்றிருந்தது. உணவகத்திற்கு சென்று தேநீரும் உணவும் சாப்பிடவேண்டி உச்சிக்கு சென்றோம். அங்கே அனோஜன் முன்கூட்டியே வந்திருந்தார். எல்லோரும் சேர்ந்துகொண்டோம். எழுத்தாளர் கருணாகரனும் அங்கிருந்தார். வேறு எவரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தேனும் ஒடியலும் கொடுக்கவேண்டி கொண்டுவந்த லெனின் மதிவானம் அவரையும் பார்த்ததில்லை. உண்மையில் அங்கு அவர் வந்திருக்கவில்லை. உணவுகளை முடித்துக்கொண்டு அருகில் இருந்த பல்கனி போன்ற இடத்தில் நின்று ஒரு சில புகைப்படங்களை DSLR இல் எடுத்துக்கொண்டோம். நாகரிகதிற்காக ஒரு சில என்றேன். எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டோம். கிரிசாந்த் பல எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டு வந்தார். எல்லோரும் வெகு விரைவாக பழகிக்கொண்டோம். பலரை நான் அண்ணா என்ற விகுதியுடன் அழைத்ததை விரும்பாதவர்களாக இருந்தார்கள். பெயரைச் சொல்லியே அழைக்கலாம் என்றார்கள். நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அண்ணா என்றே அழைத்தேன். அரை மணி நேர இடைவெளிக்குள்ளேயே எல்லோரும் எல்லா இடங்களும் பழக்கத்திற்கு வந்தது. தெரியாத அனைவரும் தெரிந்தவர்கள் ஆகிப்போனார்கள். ஒரே ஒரு அறிமுகம் தான் தேவைப்படுகிறது, அந்நியர்கள் நம்மவர்கள் ஆகுவதற்கு. அத்தனை அறிமுகத்திலும் தேனிற்க்கும் ஒடியலுக்கும் வேலை வரவே இல்லை.
ஹட்டன் குறிப்புக்கள்- 8
வழமை போலவே பத்து மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. இலக்கிய சந்திப்பின் வரலாறு சொல்லப்பட்டது. நான் கட்டடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அது மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. சுவர், மேற்றளம் என்று எல்லாமே மரத்தினால் ஆனது. வைரமான மரத்தினால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஹட்டனில் நிற்கின்ற மரங்கள் எல்லாம் வவுனியாவில் இருக்கின்ற மரங்களைப்போல மூன்று நான்கு மடங்கானவை. உயரத்திலும் தடிப்பிலும். மூங்கில் மரங்கள் இங்கிருக்கும் தென்னையைப் போல தடிப்பாக இருந்தன. மிகவும் பெரிய மரங்களின் ஆயுட்காலம் என்னவாக இருக்கும்? அதன் வளர்ச்சி வெயில் பிரதேசங்களைப்போன்றனவா? என்ற கேள்விகள் எழுந்தன. சுய அறிமுகம் தொடங்கியது. ஒரு வரிசையாக அறிமுகம் செய்து கொண்டுவந்தார்கள். முழுமையாக அறிமுகம் முடிந்தது. எனக்குள் சந்தேகங்கள் எழத்தொடங்கியது. கிழக்கிலங்கை முஸ்லிம்களைத் தவிர வேறு யாருமே தாங்கள் செய்யும் தொழிலை மதித்து அறிமுகப்படுத்தியதாகவே தெரியவில்லை. இது எழுத்தாளன் வறுமையானவன் என்ற அடையாளத்தை பலப்படுத்தவா? செய்கின்ற தொழிலை விடுத்து அறிமுகம் செய்திருக்கலாமே. எழுத்தாளனாகவோ, வாசகனாகவோ, நலன்விரும்பியாகவோ, இலக்கிய விமர்சகராகவோ தங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே. அவர்களின் படைப்புக்களின் பெயர்களைச் சொல்லி ஆரம்பித்திருக்கலாம். இப்படி எத்தனையோ வழியிருக்க தம்மை கீழ்மைப்படுத்தி அறிமுகம் செய்வதற்கான நோக்கம் என்ன? இதன் பின்னுள்ள மனநிலை எவ்வாறானது?

ஹட்டன் குறிப்புக்கள்- 9
சுயஅறிமுகம் நடந்துகொண்டிருந்தது. ரியாஸ் குரானாவும் அவரின் நண்பரும் வந்து எனக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார்கள். அப்போது எங்களைத் தாண்டி மைக் போயிருந்தது. பின்னர் ரியாஸுக்கு அறிமுகம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்போது மட்டும் தான் அவருக்கு உத்தியோகப்பூர்வமாக மைக் கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறன். முதன் முதலில் அன்று தான் ரியாஸ் குரானாவை நேரில் பார்கிறேன். வெள்ளை ஜீன்சும் கறுப்பு மஞ்சள் – என்று நினைக்கிறன், மேற்சட்டையும் அணிந்திருந்தார். அறிமுக கூட்டத்தில் யாரோ ஒருத்தனை வலுகட்டயாமாக இழுத்துவந்தால் அவனது முகபாவனை எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவரின் பாவனைகள். அறிமுகத்திலேயே தன்னைக் கலகக்காரன் போல அறிமுகம் செய்தார். எனது மனதிற்கு மிகுந்த கறாரான மனிதராக தெரிந்தார். எல்லா அறிமுகங்களிலேயும் என்னை வியக்க வைத்த அறிமுகம் குமாரதேவன் ஐயாவினுடையது. “ நீங்கள் எழுதும் புலி பூனை பற்றிய கதைகளையெல்லாம் வாசிக்கும் வாசகன், தான்” என்று பெருமிதமாக சொல்ல அரங்கமே பாராட்டியது. இறுதி நாளின் கடைசி மணிநேரங்களில் நாங்கள் இருக்கின்றோம். மேலே அரங்கில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான், சதீஷ் அண்ணா, கிரிசாந்த், யதார்த்தன், மகி, மதுரன், ஸ்டான்லி மற்றும் வாசுதேவன் என்று பிரான்சில் இருந்துவந்த புலம்பெயர் எழுத்தாளர் ஒருவரும் கறுப்பி என்கிற புனைபெயர் உடைய சுமதியும் புலம் பெயர் எழுத்துகள் பற்றியும் இன்னும் கொடுக்கப்படாத தேநீர் பற்றியும் பேசிக்கொண்டு மஞ்சள் நதியின் சுவர்களில் சாய்ந்துநின்றோம். பேச்சின் நடுவில் கிரிசாந்த் எம்மை நோக்கி வருவது போன்று இருந்தது. எப்போது விலகிப் போனார் ஏன் விலகிப்போனார் என்று எதுவும் தெரியவில்லை. சிரித்துக்கொண்டே குமாரதேவன் ஐயா காரசாரமாக தன் கருத்துகளை வைத்திருப்பதாக சொன்னார். அந்த சமயம் நிகழ்வின் முடிவில் கருத்துகள் கேட்கப்பட்டுகொண்டிருந்தன. அதைப் பற்றி மேலும் பேச இடம் கொடுக்காமல் மேலிருந்து கொடுக்குப் புன்னகையுடன் மேலிரண்டு பொத்தான்கள் கழன்ற மேற்சட்டையும் சாரமுமாய் குமாரதேவன் ஐயா இறங்கிவந்துகொண்டிருந்தார். எம்மோடு சேர்ந்து தான் கூறிய கருத்துகளின் உள்ளடக்கத்தைச் சொன்னார். ஆரம்பத்திலும் முடிவிலும் குமாரதேவன் ஐயா என்னைக் கவர்ந்தவராகவே இருந்தார். இப்போது அந்த கறை படிந்த முன் பற்கள் தெரிய சிரித்த கொடுப்பு சிரிப்பும் படிகளில் இருந்து இறங்கிய விதமும் அவரை சாமானியராக பார்க்கத் தூண்டவில்லை.
ஹட்டன் குறிப்புக்கள்- 10
அறிமுகம் முடிந்தது முதல் அரங்கில் பங்குபற்றுவோர் அழைக்கப்பட்டனர். நிகழ்வு தொடங்குவதற்கு முதலே விஜி,- அப்படித்தான் ஞாபகம் இருக்கிறது, தனக்கு 10 நிமிடங்கள் தருமாறு அவையை கேட்டுவாங்கிக்கொண்டு, புலம் பெயர் எழுத்தாளர்களின் அரங்க இருப்பு சம்பந்தமான முக்கியமான கேள்வியை முன்வைக்கப்போவதாக கூறினார். பின்னிருந்த ரியாஸ் முன்னால் வந்து அருகில் இருந்த மைக்கை எடுத்து பேசுவதற்க்கான சந்தர்பத்தை எதிர்பார்த்தவராக நின்றார். பின்னர் நடந்தவை விவாதத்திற்கு உரியவை. ரியாஸ் கதிரை ஒன்றை எடுத்து அந்த இடத்திலேயே இருந்தார். ஏற்பாட்டுக்குழுவும் கேள்வி எழுப்பியவரும் பேசிக்கொண்டு தமக்குள்ள சமாதானம் அடைந்து கொண்டார்கள். ரியாஸிற்கு பேச சந்தர்ப்பம் வழங்கவில்லை. நாளின் இறுதியில் இவற்றை எல்லாம் வைத்துகொள்வோம் என்று கருத்துவர நிகழ்வின் இறுதிக்கு விவாதங்கள் ஒத்திபோடப்பட்டது. எடுத்த கதிரையை மீண்டும் பழைய இடத்தில் வைத்துவிட்டு ரியாஸும் நண்பரும் வெளிநடப்பு செய்தார்கள். நான் சிறிது நேரம் நிகழ்வுகளை பார்த்துகொண்டிருந்தேன். என்னோடு சதீஸ் அண்ணாவும் குமாரதேவன் ஐயாவும் இருந்தார்கள். எங்களைச் சுற்றி உள்நாட்டவர் புலம்பெயர்ந்தவர் என்று நிறையப் பெயர் பார்த்துகொண்டிருந்தார்கள். அவைக்குள் தொப்பியும் பிரெஞ்சு தாடியும் சில்க் மேற்சட்டையும் ஜீன்சுமாக உயரமாக ஒருவர் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார். முதலாவது உரையும் அவருடையதே. அவர் தான் லெனின் மதிவானம் என்று அறிந்துகொண்டேன். சிறிது நேரத்தில் நான் அறைக்குள் சென்றேன். அறைக்குள் ஒரு பெரும் கோட்டமே நடந்து கொண்டிருந்தது. நான் அங்கு செய்த முதல் இலக்கிய சந்திப்பு அது தான்.

ஹட்டன் குறிப்புக்கள்- 11
ரியாஸ் குரானாவும் அவரின் தோழர் மிஹாத்தும் கூடவே எங்கள் நண்பர்களுமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்த ரியஸா இது என்பது போல இருந்தது. சிரிப்பும் கலகலப்புமாக இருந்தார்கள். ரியாஸ் தன் பக்க நியாயங்களைக் கூறிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பல்வேறு விடயங்களைப் பற்றி கதைத்தோம். மதிய உணவிற்கான நேரம் வந்தது. முதல் முப்பது பேரும் மேலே உணவகத்திற்கு சென்றிருந்தார்கள். அதனால் நாங்கள் காக்கவேண்டியதாக இருக்கும் என்று நண்பர் ஒருத்தர் கூறியபோது, ரியாஸ் தான் வைத்திருக்கும் இரண்டு பாசலையும் பங்கிடலாமே என்றார். பின்னர் உணவகத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து மேலிருக்கும் வீட்டிற்கு எல்லோருமாக சென்றோம். இருக்கின்ற இரண்டு பாசலை நாங்கள் கிட்டத்தட்ட பத்து பேர் அளவில் பிரித்துகொண்டோம். அங்கு சில சம்பாஷனைகள் நடைபெற்றன. அது தான் எங்களுக்கு இடையிலான கடைசி சந்திப்பாக அன்று இருந்தது. கடைசி நேரத்தில் ரியாஸ் பேச ஒரு நிமிடம் வேண்டிப் போராடியதாகவும் பின்னர் கோபித்துக்கொண்டு 5.30 மணி பஸ்சிற்கு போய்ச் சேர்ந்ததாகவும் அறிந்தேன். நாங்கள் இரண்டாவது முறை மதிய உணவை சாப்பிட வீட்டிற்கு மேலிருந்த உணவகத்திற்கு சென்றோம்.
ஹட்டன் குறிப்புக்கள்- 12
உணவகம் தான் இரண்டாவது இலக்கிய சந்திப்பின் களம். தொப்பியை இன்னும் கழற்றாமல் லெனின் தனியாக சாப்பிட்டுகொண்டிருந்தார். நான் உணவுவை போட்டுக்கொண்டு அவர் அருகில் போயிருந்து நான் பிரிந்தன் கணேசலிங்கம் என்றேன். அவர் அளவு கடந்த சந்தோசத்தோடு என்னைப் பார்த்தார். அவர் அப்போது உண்டு முடிக்கும் தருணத்தில் இருந்தார். இருந்தாலும் எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கி விசாரித்தார். என் அப்பாவிற்கும் அவருக்குமான பழைய கதைகளை பற்றிப் பேசினார். என்னைப்பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மீண்டும் கட்டாயம் சந்திக்கவேண்டும் உரையாடவேண்டும் என்றார். எழுத்து கைகழுவ சென்றபோது பேசத் தொடங்கும் போது பிசைந்த சோறையும் இறைச்சி துண்டையும் சாப்பிடத் தொடங்கினேன். எல்லாம் முடிந்து இறங்கும் போது அவர் யாருடனோ கதைக்கொண்டிருக்க நான் அவை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று தேனையும் ஒடியலையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு கொடுத்தேன். தன்மேல் தான் எதையும் கொண்டுவரவில்லையே என்று கவலைப்பட்டார். நான் அப்போது எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. பின்னேரம் அறையிலேயே இன்னொரு கலந்துரையாடல். புத்திதாக அறிமுகானவர். மலையகத்தின் இன்னல்களை சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் மலையக உணர்ச்சி தெரிந்தது. அவர் அதற்காக தன்னாலான முயற்சிகளைச் செய்வதாகவும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஆதங்கப்பட்டார். மலையகத் தமிழர்கள், அரசியல்வாதிகள், தொழிற்ச்சங்கங்கள், பாடசாலைகள் என்று பலதரப்பு சம்பந்தமாக பேசிக்கொண்டோம். எங்களுடன் லதீபன் அண்ணாவும் இணைந்திருந்தார்.
ஹட்டன் குறிப்புக்கள்- 13
அன்றைய நாளின் பின்னேரம் நானும் லதீபன் அண்ணாவும் மஞ்சள் நதியின் சுவரில் இருந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். பலத்தைப் பேசினோம். ஹட்டன் முழுக்க மப்பும் மந்தாரமாகவுமே இருந்தது. இப்போது மஞ்சள் நதி தெளிந்திருந்தது. இரவு காமன் கூத்து. கூத்தின் ஒரு பகுதி. மேலிருந்த வீட்டின் முற்றத்தில் எல்லோரும் இருக்கவும் நிற்கவும் இருட்டில் அந்த இடமே நிறைந்திருந்தது. அதற்கு சற்று முதல் தான் மூன்றாவது இலக்கிய சந்திப்பு இடம்பெற்றது. படிகளில் நானும் கிரிசாந்தும் வீட்டிற்கு ஏறிக்கொண்டிருக்கும் போது முன்னாள் ஏறிக்கொண்டிருப்பவர் தெளிவத்தை ஜோசப். படிகளை கவனமாக பார்த்துக்கொண்டு அருகில் இருந்த படிப்பிடிகளில் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறிக்கொண்டிருந்தார். படிப்பிடிகள் இடையில் முடிய அவரும் தடுக்குற்றார். பின்னால் ஏறிய நான் அவரைப் பிடித்துகொண்டு வீட்டின் முற்றத்திற்கு ஏற்றிச் சென்றேன். DSLR உடன் ஏறிய கிரிசாந்த் அண்ணாவைக்கொண்டு ஒரு புகைப்படம் இருவரும் எடுத்துகொண்டோம். தெளிவத்தை ஜோசப். காமன் கூத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பெருத்த கனமான உடைகளுடன் முகத்தில் பூச்சுகளும் தலையில் சவரியும் கைகளில் ஆயுதங்களும் என தங்களை தயார்படுத்தியிருந்தார்கள். நான்கு ஐந்து வயது சிறுவர்களும் அதில் நின்றார்கள், பிள்ளையாராகவும் முருகனாகவும். வாத்தியார் ஒருவர், பாட ஒருத்தர், தப்பிசைக்க மூவர், ஒத்தாசைக்கு சிலர். நாமெல்லோரும் சுற்றி நின்றோம். இருள் ஏற காமன் கூத்து தொடங்கியது. ஒவ்வொருத்தராக வந்து அறிமுகம் செய்துகொண்டார்கள். அவர்களின் முகம் முழுக்க சோகமும் கவலையும் தோய்ந்திருந்தது. கண்களில் வெளிச்சமே இல்லை. கூத்தும் சோகத்தின் அடையாளமாகவே இருந்தது. அவர்களின் உடலின் எந்தப்பாகமும் சக்தியுடன் ஆடியதாக தெரியவில்லை. பாடல்கள் இழுவையான சோகத்தில் இருந்தன. சிறுவர்கள் கூட சிரிக்கப் பார்க்கவில்லை. இருட்டுத் தான் காமன் கூத்தா? இது தான் மலையகக் குறியீடா? , தப்பு மட்டும் ஆவேசமாக இருந்தது. தோலில் சவுக்கு வீசுவதனால் பொறுக்கமுடியாமல் தப்பு போட்ட கூச்சலா அது? அது அமாவாசையின் இருந்திருக்க கூடும்.
ஹட்டன் குறிப்புக்கள்- 14
முதல் நாள் இரவின் இறுதிப் பொழுதுகளைக் கழிக்க நான், யதார்த்தன், கிரிசாந்த்,லதீபன், மகி, மதுரன் மற்றும் சுமதி ஆகியோர் ஈழத்து, புலம்பெயர் திரைப்படங்கள் சம்பந்தமாக மேலோட்டமாக கதைத்துக்கொண்டிருந்தோம். இடையில் ஈழத்து திரைப்படங்களின் அடையாளம் எது என்ற கேள்வி என்னால் முன்வைக்கப்பட அது பெரிய விவாதப் பொருளானது. இலேசான தூறலுடன் மழை தொடங்கியிருக்க நாங்கள் படிகளுக்கு அருகில் அந்தரத்தில் இருந்த கதைப்போர் கூடம் போன்ற தோற்றமுடைய திறந்த தளத்திற்கு சென்றோம். கதிரைகளை அடுக்கிவிட்டு எல்லோருமாக மீண்டும் வாதிக்கத் தொடங்கினோம். எங்களோடு ஒவ்வொருவராக இணைந்து கொள்ளத் தொடங்கினார்கள். எழுத்தாளர் ஜீவமுரளி, எழுத்தாளர் கருணாகரன் அண்ணா என்று ஒன்றொன்றாகக் கூடிக்கொண்டே போனார்கள். காரசாரமான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன. பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகளும் நீண்டு அகண்ட கருத்துநிலை உரையாடல்களும் இடம்பெற்றன. எல்லோருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. இரண்டு மணித்தியாலங்கள் நீண்ட ஆரோக்கியமான உரையாடல் முடிவிற்கு வந்தது. எல்லோரும் தத்தம் இடங்களுக்கு கலைந்து சென்றனர். இது நாங்கள் தங்கியிருக்கும் கட்டடத்தின் முதல் அறை. கிட்டத்தட்ட இரவு பதினொன்று பன்னிரண்டு வரும். நான், கிரிசாந்த், லதீபன், குமணன், மகி என்று வழமையானவர்களுடன் ஒரு புதிய முகம் சேர்ந்திருந்தது. புதிய முகம் என்றில்லை. எமக்கான முதல் அறிமுகம் அது தான். தமிழ் ஆசிரியர் ராமர் எங்களோடு இருந்தார். அன்றைய நாளின் முதல் அரங்கில் அவர் உரையாற்றியிருக்கிறார். காமன் கூத்தில் பாடியும் நடித்தும் தப்பிசைத்தும் இருக்கிறார். முக ஒப்பனைகளால் அவர் தான் என்பதை ஊகிக்க முடியாமல் இருந்தது. பெரும்பாலானோர் உறங்கியிருக்க குமணனின் புல்லாங்குழல் இசையிலும் டொலக்கின் மெல்லிய உரசலுடனும் மலையக பாடல்களை ராமர் அண்ணா பாடிக்கொண்டிருந்தார். இருட்டின் நிசப்தத்தில் அந்த இசையும் வரிகளும் குளிர்ந்த காற்றோடு கலந்து மஞ்சள் நதியின் சலசலப்பில் கலந்து மறைந்தன. தூக்கம் தொற்றியது.
ஹட்டன் குறிப்புக்கள்- 15
இரண்டாம் நாள் அதே குளிருடன் தொடங்கியது. இந்த முறை குளிப்பதற்கு கருணாகரன் அண்ணா இருந்த அறையின் குளியலறையை பயன்படுத்திக்கொண்டேன். அங்கே சுடுநீர் வந்தது. காலை உணவுடன் விழாக்கள் ஆரம்பமாகியது. எப்போதுமே மனிதன் முதலாவதைத் தான் நினைவில் அதிகம் வைத்திருப்பான். இரண்டாவது அரையும் குறையும் தான். முதன்நாள் இருந்த சுவாரஸ்ய தன்மையும் புதிதான மனிதர்களுடன் பழகப் போகின்றோமே என்கிற ஆவலும் இரண்டாம் நாள் தணிந்திருந்தது. இரண்டாம் நாள்தான் புத்தக அறிமுக நிகழ்வுகளுக்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது. புதிய சந்திப்புக்கள் என்று எதுவும் இல்லை. நாங்கள் தனியாகவோ குழுவாகவோ எதையும் வாதித்துக்கொள்ளவில்லை. இரண்டாம் நாள் செழிப்பு அற்றதாகவே இருந்தது. மதிய உணவை லெனின் மதிவானம் உடனேயே சாப்பிட்டேன். கூடவே சில நினைவுப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன். சந்திப்புக்களை நினைவு கூற புகைப்படங்கள் இப்போது அவசியமாகிப் போகின்றன. பின்னேரப் பொழுது, சிறிது சுவாரஸ்யமாகப் போனது. எங்களிடம் மிகச் சிறந்த பாடல் புத்தகம் கிடைத்தது. அதற்கு நானும் ஸ்டான்லியும் குமணனும் இசை அமைத்துப் பாடினோம். இசை என்பதை விட விதம் விதமாகப் பாடினோம் எனலாம். வெகு நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக பாடினேன். மஞ்சள் நதியின் சலசலப்புக்கூட அதை விட இனிமையாக இருந்ததை நான் அறிவேன்.
ஹட்டன் குறிப்புக்கள்- இறுதி
ஹட்டன் இலக்கிய சந்திப்பு தொடர்பான கடைசிக் குறிப்பு இதுவாகத் இருக்கும். ஆழமாக பேச இரண்டாம் நாள் எதையும் மிச்சம் வைத்திருக்கவில்லை. இரண்டு முறை நாங்கள் ஏமாற்றப்பட்டு மூன்றாம் முறை புத்தக அறிமுகம் செய்ய வாய்ப்புக்கிடைத்தது. நாங்கள் கேட்டிருக்காவிட்டால் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம். அவை சரிக்கு சரி அரைவாசியாக இருந்து. அவை அரைவாசியானதிற்கு பொருத்தமான காரணங்கள் நிறைய இருகின்றன. சோர்வுற்றிருந்த சபைக்கு தேவை விடுதலை, அறிமுகம் அல்ல. அறிமுகத்தை அனோஜன் செய்திருந்தார். முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நான் முன் இருக்கைகளில் அமர்ந்தேன். அறிமுகம் தொடங்கி இருபது செக்கன்கள் ஒளிபரப்பாகியிருக்கும். தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலையில் இருந்து இரண்டு முறை கேட்ட உரையை மூன்றாம் முறையாகவும் கேட்டேன். முதலிரண்டு முறையும் பேசுவதற்கு முன்னாயத்தமாக என்னிடம் பேசிக்காட்டினார். 7.20 ற்கு பஸ் கிளம்பும் என்றார்கள். ஆறு மணியவிலேயே டோல்பினுக்குள் திணிக்கப்பட்டோம். இரண்டாம் நாளின் குளிர் மிக வேகமாக கடந்து சென்றது. முதல் சந்திப்பில் இருக்கின்ற மாயம் ஏனோ இரண்டாம் சந்திப்பில் இருப்பதேயில்லை.
 

139 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top