Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

விநோத நூலகத்தின் புதிர்வழிப் பாதைகள்

(01)

நீங்கள் யாராவது பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி இசையைக் கேட்டதுண்டா? ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளின் கலவை. கண்களை மூடிக்கொண்டு காதுகளால் பார்க்கவும் கேட்கவும் நுகரவும் உணரவும் கூடிய இசைத் துணுக்குகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கிறது. இது வரை பதினாறு  முறை கேட்டிருப்பேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது பதினேழாவது முறையாக – நீங்கள் வாசிக்கும் போது இருபதோ முப்பதோ என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நீண்ட கோர்வையான இசையின் நடுவில் – எதேச்சையான ஒரு இசைத்துணுக்கின்பால் இழுபட்டு, ஆழ்மனதினுள் புதைந்து வெளிச்சமே படாத ஞாபகங்களை மீட்டிக்கொண்டுவந்துவிடும். இதை அனுபவம் என்று சொல்லமாட்டேன்.  உணர்வு – நினைவுகளில் இருந்து அகன்று போய் ஆனால் இன்னமும் அழியாமல் இருக்கின்ற சம்பவங்களை மீட்டுவதை அனுபவம் என்று சொல்லவே மாட்டேன். வதை –  மறந்து போன ஞாபகம் ஒன்றைப் பற்றிய யோசனை மீண்டும் எழுவது எவ்வளவு கொடூரம். உணர்வு நிலைக்கும் வதை நிலைக்கும் இடையே ஒரு இசைத்துணுக்கினூடு பயணம் செய்வதை நான் அதிகம் விரும்புகிறேன். நீங்களும் விரும்புவீர்கள். இதனாலேயே பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உங்களையும் கேட்கச் சொல்கிறேன்.

பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியின் இடைநடுவே வார்த்தைகளும் வசனங்களும் சேர்ந்திசைகின்ற குரல் பின்னணிகளும் கேட்கும். ஜெர்மானிய கவிஞரான Schiller இயற்றிய Ode to Joy என்ற கவிதையும் பீதோவன் சேர்த்த வார்த்தைகளும் இசைப்பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும். வலிமை மிகுந்த இசையின் மேலாக வருகின்ற கவிதை – தனது தனித்த நிலையிலிருந்து மேலும் வலிமையாகின்றது.

Your magic binds again
What convention strictly divides;
All people become brothers,
Where your gentle wing abides. 1 – மெலிதாக எழுகின்ற இசைத்துணுக்குகளுக்கு இடையே வார்த்தைகள் கனமானதாக வெளிப்படுகின்றன.

ஏன் இசையையும் வார்த்தைகளையும் பற்றிய இவ்வளவு நுட்பமாக அவதானங்களைச்  சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படுகின்றது என்ற சந்தேகத்தை நீங்கள் இன்னமும் என்னிடம் கேட்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. இப்போது கேட்கலாம்- ஆனால் அதற்கு முதல்,

(02)

இன்றைய சூழலில் இதுபோன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெரிய பிரயோசனம் ஒன்றும் இல்லை. இதைவிட அதிக வீச்சான, ஆழமான, புரியாத வார்த்தைகள் கணனி எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பெரும் எழுத்தாளரோ அல்லது பிரபலமான முகப்புத்தக  பதிவாளரோ தப்பித்தவறிக் கூட  ஓரிரு வசனங்கள் எழுதிவிட்டாலும் – எங்கிருந்தோ ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து, அவர்களின் வசனங்களிற்கு பெரும் பொழிப்பே உருவாக்கிவிடுவார்கள். இந்த அந்நியமான கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம்  இல்லாமல் ஒரு கலைவடிவத்தை ரசிக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியான எண்ணம் உங்களுக்குள் உருவாகிவிட்டாலே – இப்போதே இதைக் கடந்து பகுதி  03ற்கு செல்லுங்கள். இவை உங்களுக்கானவை அல்ல.

1966 களுடன் கொள்கையளவில் முடிந்துபோன வடிவம் Surrealism. இதைத் தமிழில் அடிமன வெளிப்பாட்டியம் என்கிறார்கள் (!). 1924 ஆம் ஆண்டு இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது கவிஞர் André Breton இனால் இவ்வடிவம் தலைமைதாங்கப்பட்டது.  இதை இவர் -“Psychic automatism in its pure state, by which one proposes to express…the actual functioning of thought…in the absence of any control exercised by reason, exempt from any aesthetic or moral concern.” 2 என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க – Surrealism என்பதை இவ்வாறு எளிதாக அடையாளப்படுத்துவோம் – கற்பனையின் அசல் வடிவம்.

நவீன (அதாவது அக்கால – 1924கள்) சமூகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து- கடுமையான சட்டங்களுக்கு எதிராக வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாகவே Surrealism பரவத்தொடங்கியது. எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற கற்பனையின் வெளியில் தமக்கெதிரான அதிகாரத்தையும் கொள்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருந்தது Surrealism. ஓவியத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கலைவடிவமாக பரவியது.

சிக்மன்ட் பிராய்ட் (Sigmund Freud)இன் படைப்புகள் சர்ரியலிஸ்ட்களின் மீது  ஆழமான செல்வாக்கை செலுத்தின. மிக முக்கியமாக அவரின் கனவுகளின் விளக்கம் The Interpretation of Dreams (1899) பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. பிராய்ட் கனவுகளின் முக்கியத்துவம் பற்றியும் – கனவுகள் நிஜமனிதர்களின் உணர்வுகளோடும் விருப்பங்களோடும் ஏற்படுத்துகின்ற வலிமையான பிணைப்புக்கள் பற்றியும் தெளிவாக விபரிக்கின்றார். இது சர்ரியலிஸ்ட்க்கு ஒரு நெறிப்படுத்தும் கையேடு போல மாறியது.

Existentialism மற்றும் individualism இன் வருகையினால் Surrealism நேரடிப்புழக்கத்திலிருந்து விடுபடத்தொடங்கியது.  பெயரளவில் மற்றைய சிந்தனைகள் Surrealismஇன் புழக்கத்தை மறைத்தாலும் – இன்னமும் இது கலைவடிவங்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இலக்கியத்தில் இதன் வருகை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சர்ரியலிச இலக்கியத்தின் பொதுத்தன்மை என்று எதையும் வகைப்படுத்திவிட முடியாது. இருந்தும் பெரும்பாலான படைப்புகளில் கனவையும் நிஜத்தையும் இணைத்தார்கள். வாசகனால் ஊகிக்கமுடியாத பிரமிப்பூட்டத்தக்க உருவகங்களையும் கவிதை முறையில் கதை சொல்லுகின்ற பாணியையும் பின்பற்றினார்கள். கவிதை முறையில் கதை சொல்லும் போது, விரிந்த அழகியலுடன் கூடிய கனவு வெளியினை உருவாக்கிவிடலாம் என்றறிந்து பின்பற்றினார்கள்.

இலக்கிய வகுப்பு ஒன்றினை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புரிகின்றது. அதனால் அதிகம் இழுத்துக்கொண்டு போகாமல் உபபகுதிக்குள் போகலாம்.

(02 – இடைச்சொருகல்)

Goodreads  இணையதளம் தெரிவு செய்த சிறந்த எண்பத்து எட்டு சர்ரியலிச இலக்கிய படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 4

1.Kafka on the Shore -Haruki Murakami
3.The Wind-Up Bird Chronicle -Haruki Murakami
4.Metamorphosis and Other Stories -Franz Kafka
6.Hard-Boiled Wonderland and the End of the World – Haruki Murakami
12.1Q84 -Haruki Murakami
13.After Dark -Haruki Murakami
20.A Wild Sheep Chase (The Rat, #3) -Haruki Murakami
53.The Elephant Vanishes – Haruki Murakami

(02- முடிப்பு )

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஏன் இலக்கிய வகுப்பு என்று. Surrealism என்ற இலக்கிய வடிவத்திற்கு உதாரணம் கூறச்சொன்னால் ஹருகி முரகாமியின் அனைத்துப் படைப்புகளையும் பட்டியலிட்டுவிடலாம். Surrealism என்ற இலக்கிய வடிவத்தின் உருவமாக ஹருகி முரகாமியின் நாவல்கள் இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள பட்டியலே சாட்சி. இருந்தும் பெரும்பாலான விமர்சகர்களும் விமர்சனங்களும் ஹருகி முரகாமியை Surrealism வடிவத்தினூடு ஒத்துப் பேசி பார்த்ததே இல்லை. ஏன்? ஒரு வடிவத்தின் தூண் மாதிரி இருக்கும் ஒரு எழுத்தாளர் – அவ்வடிவத்தின் மூலமாக விமர்சிக்கப்படாமை வருத்தமளிக்கிறது.  நூல்களோடு ஒப்பிடும் அளவும் – அதைத்தாண்டிய ஆழமான கலைவடிவத்தையும் சிருஷ்டிக்கின்ற ஹருகி முரகாமியின் குறுநாவல் ஒன்றைப்பற்றியே சொல்லப்போகிறேன். இது மேலுள்ள பட்டியலில் இல்லை. பட்டியல் மட்டும் அல்ல – தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் கவனம் பெறாத ஒன்று.

இனி வரும் அத்தியாயங்களில் நான் பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி பற்றியோ அல்லது Surrealism பற்றியோ பேசப்போவதில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் இவையிரண்டும் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லும்.

(03)

Novella எனப்படுகின்ற இலக்கிய பிரதி வடிவை தமிழில் குறுநாவல் என்றழைப்பார்கள். இரண்டு அல்லது மூன்று கதைக்கருக்களை மையமாக கொண்டதும் நீண்ட சிறுகதையாக அல்லது குறுகிய நாவலாக கருதத்தக்க வடிவம். குறுநாவல் வடிவத்தை பெரும்பாலும் எல்லையற்ற எழுத்துப்பாணியில் (Free style) எழுதுகின்றவர்களால் கையாளப்படுகின்றது.  ஹருகி முரகாமியின் வினோத நூலகமும் வடிவ வகைக்குள் குறுநாவலாகவே கருதப்படுகின்றது. இருந்தும், பிரதி பேசுகின்ற கருவின் அடிப்படையில் இதனை சிறுகதையாகவே கருதுகின்றேன். மேலை நாடுகளில் வினோத நூலகத்தை குறுநாவலாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் – ஆங்கிலத்திலோ மற்றைய மொழிகளிலோ அதிக படங்களுடன்  கூடிய புத்தகமாக வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பை ஜி. குப்புசாமி செய்திருக்கிறார். மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு. கதையின் உயிரோட்டமான மொழியினை பிசகு இல்லாமல் தமிழுக்கு மொழி பெயர்த்திருப்பார்.

வினோத நூலகத்தின் புத்தக வடிவமைப்பு கவனிக்கத்தக்க ஒன்று. சிறுகதையைப் போலவே நூற்பிரதியும் ஆச்சரியங்களும் புதிர்களும் நிரம்பியவை. நூலாக்கம் பொதுவான இலக்கியப் பிரதிகளைப் போல அல்லாமல் வித்தியாசமானதாகவும் பார்த்த மாத்திரத்தில் கவரக்கூடிய வகையிலும் ஆக்கப்பட்டுள்ளது. பிரதியின் ஆரம்பத்திலேயே நீள்பக்கமாக திறக்க வைக்கிறார். சமாந்தர பக்கங்களில் ஒரு பக்கம் எழுத்துப் பிரதியும் மற்றைய பக்கம் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கும். எழுத்துருக்கள் வழமையான அளவிலும் சற்று அதிகமாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற ஓவியங்கள் கதையின் நீட்சியினை சொல்லிக்கொண்டு போகும். ஒரு பக்கத்தில் அரை நிலவும் தொடர்ந்து அரை டொனல்ட்டும் அதைத் தொடர்ந்து மிகுதி நிலவும் அச்சிடப்பட்டிருக்கும். பிரத்தியேகமான அட்டை வடிவமைப்பு. தமிழில் பூனைகள் நகரம் தொகுப்பில் வினோத உலகம் ஒளிந்துகொண்டிருக்கிருக்கிறது. பூனைகள் நகரம் ஜி. குப்புசாமியால் மொழி பெயர்க்கப்பட்ட முரகாமியின் சிறுகதைகளைக் கொண்ட புத்தகம்.

“……..முரகாமி இதற்குமுன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம்‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது……” 5

முரகாமியின் வினோத நூலகம் வெளிவந்த ஆரம்ப காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெறுமனே ஒற்றைத் தளத்தில் நகர்வதாகவும் கனவுகள் கோர்வைகள் மட்டுமே எஞ்சுகின்றன  என்றும் இகழப்பட்டது. பின்னரான விரிவான வாசிப்பு – வினோத நூலகத்தின் பூட்டப்பட்ட கதவுகள் அனைத்தையும் திறந்தது; திறந்துகொண்டிருக்கின்றது. முதலாம் வாசிப்பின்போதே வினோத நூலகம்  என்னளவில்  சிறந்த படைப்பாக உணரப்பட்டது. வழமையாக குறைவான சொற்கள் வேகமான நடையை ஏற்படுத்தும். ஆனாலும்  குறைவான சொற்களினூடு மெதுவான உணர்வுப் பரிமாற்றத்தை முரகாமி ஏற்படுத்தக்கூடியவர்.

கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வினோத நூலகத்தை இன்றைய வாசகர்கள் பலவாறு திறந்து அணுகுகின்றார்கள். இன்னும் பலர் அதனை மிகவும் சாதாரணமாகவே – சாகசக் கதைகள் கேட்பது போல கடந்து போகின்றார்கள். Lewis Carroll எழுதிய Alice in Wonderland ஐ ஒட்டிய கனவுலகங்களை சிருஷ்டித்து எழுதியிருக்கிறார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது. 6 எது எவ்வாறாக இருந்தும் வினோத நூலகத்தை நெருங்கி வாசிப்பது அதிக சுவையைத் தரும். வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் வினோத நூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்கள் அனைத்தும் குறியீடாக கதையை நகர்த்திச் செல்கின்றன. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லமுடியாது. ஆழ்மன உணர்வுகளைத், தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்வதன்  மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆன தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் கூட இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளைக் கடத்துகின்ற பிரதியே. ஹருகி முரகாமியின் வினோத நூலகத்தை  அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.

வினோத நூலகம், ஒரு உணர்வின் வெவ்வேறு  பரிமாணங்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய அல்லது ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டிய இன்னொரு அக உலகினை உருவாக்குகின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக் கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்களால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அல்லது செய்ய முடியாத அசாத்தியங்களின் தொகுப்பாக இருக்கும்.  அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லாக் கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதர்கள் உருவாக்கிக்கொள்வார்கள்.  இதையே உணர்வு ஒன்றின் வெவ்வேறான  பரிமாணங்கள் என்கிறேன். வினோத நூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின்  வெவ்வேறான  உணர்வுகளின்  பரிமாணங்கள் பற்றியது.

தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகத்தை வினோத நூலகம் என்றும் கருதலாம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது.

“நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.” 7

அதுவரை அவன் அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய உணர்வானது  அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாக்குகின்றது. அதையே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிக்கின்றார்.

அந்த அறையில் நடைபெறுகின்ற  ஒவ்வொரு நிகழ்வும் – மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.

“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.” 7

அவனைப் பிரிவு வதைக்கின்றது. மனதிலிருக்கின்ற பழைய உணர்ச்சிகள் உழல வைக்கின்றன. தனது தாய் அவனைத் தேடுவார் என்றும்; தனது கிளி தன்னைத் தேடும் என்றும்  ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவான உணர்ச்சி ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.

“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.” 7

“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?” 7

பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆட்டுத் தலை மனிதரும் இளம்பெண்ணும். பின்னர் ஒரே பாத்திரமாகி-  அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறுகின்றன. இதை வாசகர்கள் மீது  மயக்கமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதாக  முரகாமி எழுதுகின்றார்.  இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன், குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள். கூடவே அவனது  சப்பாத்தும்.

இப்படியாகவும்  வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாக உணரலாம். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலகக் கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்கக் கூடிய கொடிய உணர்ச்சிகளும் கனவுகளும் மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூட்டிய  கனவாகவும்  முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் அல்லது இதைவிட அதிகமாகவும் – வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முரகாமி வடிவமைத்திருக்கிறார்.

“அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.” 7

“சென்ற செவ்வாய்க்கிழமை என் அம்மா இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.” 7

“அம்மா இல்லை.

செல்லக்குருவி இல்லை.

ஆட்டுமனிதன் இல்லை.

அந்தப் பெண் இல்லை.” 7

“பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.”
 

பல்வேறு அனுபவங்களை பிரதி முழுக்க முரகாமி விதைத்திருக்கிறார். வினோத நூலகம் பின் நவீனத்துவ படைப்புகளில் கவனிக்கப்படவேண்டிய படைப்பாகும்.
இப்போது நீங்கள் மெதுவாக பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உணரத்தொடங்கியிருப்பீர்கள்.

You millions, I embrace you.
This kiss is for all the world! 1

பின்குறிப்புகள்.

  1. https://www.thoughtco.com/beethovens-ode-to-joy-lyrics-history-724410

 

  1. https://www.moma.org/learn/moma_learning/themes/surrealism

 

  1. https://www.goodreads.com/list/show/9755.Best_Surrealist_Literature

மேலும் முக்கியமாக கருதக்கூடிய – வாசிக்க பரிந்துரை செய்யக்கூடிய நூல்கள் . ( என்னால் வாசிக்கப்பட்டவையுள்)
The Trial -Franz Kafka
Story of the Eye -Georges Bataille
Surrealities -Bruce Boston

  1. இப்படியாக கட்டுரை ஒன்றினை எழுதுவதற்காக ஜி. குப்புசாமியிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன். அவற்றிலிருந்துதேவைக்கமைய எடுத்துக்கொண்டேன். அதன் முழு வடிவம்:

நான்  – முதல்முறையாக ‘வினோத நூலகம்‘ வாசித்த அனுபவம் எப்படியானது?

அவர் –முரகாமி இதற்கு முன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம் ‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது.

நா  – வினோத நூலகம் முரகாமியின் பிற படைப்புகளைப் போல ஏன் அதிகம் பிரபலம் அடையவில்லை?

அ – அப்படிச் சொல்லமுடியாது. எழுத்தாளர் தரப்புக்கும் ஆங்கில பதிப்பாளர்களுக்கும் இடையில் எழுந்த சில வேறுபாடுகள் காரணமாக மூலத்தில் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளிவந்த குறுநாவல் இது. முரகாமியின் வழக்கமான பதிப்பாளர்கள் வெளியிடவில்லை. போதிய விளம்பரமும் அளிக்கப்படவில்லை. இவையனைத்தையும் மீறி வினோத நூலகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருவதாகவே நினைக்கிறேன்.

நா  – ஒரு மொழிபெயர்ப்பாளராக – சமகால உலக இலக்கியங்களில் அதிக ஈடுபாடும் வாசிப்பனுபவமும் உடையவராக – வினோத நூலகம் மற்றைய படைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

அ  – எல்லா எழுத்தாளர்களுமே தமது ஒவ்வொரு படைப்பும் முந்தைய படைப்புகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்றே விழைவார்கள். அந்தளவில் ஒவ்வொரு காத்திரமான படைப்பும் தன்னளவில் வேறுபட்டதாகவே இருக்கும். முரகாமியின் வாசகனுக்கு அவருடைய படைப்புலகத்தின் ஒவ்வொரு வழியும் அதன் திருப்பங்களும் புதிய அனுபவங்களைத் தருபவையே.

நா  – முரகாமிக்கும் இசைக்கும் அவரது படைப்புகளில் அதிகத் தொடர்பு எப்போதுமே இருக்கும். வினோத நூலகத்தின் கதையோட்டத்தில் அப்படி இசைக்குறிப்பு எதையாவது உணர்ந்தீர்களா ?

அ  – முரகாமிக்கு அமெரிக்க கலாச்சார அடையாளங்கள் மீது அதிகமான மனச்சாய்வு உண்டு. நவீன ஜப்பானிய தலைமுறையினரின் பிரதிநிதி அவர். கோபோ அபே, யாசுநாரி கவாபாதா போல முழுமையான பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார மனம் கொண்டவரல்ல. இதுவே அவரது பலமும் பலவீனமும். உள்ளூரில் பலவீனம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பலம். ஜாஸ் இசையின் மீதும் பேஸ் பால் விளையாட்டின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். அவருடைய பல புனைவுகளில் இவை பின்னணியாக அமைந்திருக்கின்றன. அவருக்கு இயல்பான அகத்தூண்டல் ஜாஸ் இசையிலிருந்துதான் கிடைப்பதாக ஒப்புகொண்டிருக்கிறார். இசைக்கும் அவருக்கும்  உள்ள இறுக்கமான பிணைப்பு குறித்து அவர் அளித்த மிக நீளமான நேர்காணல் Absolutely on music  என்ற நூலாகவே வந்துள்ளது. முரகாமியின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே ரூபின், முரகாமியின் எழுத்தில் உள்ள இசைத்தன்மை குறித்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். வினோத நூலகத்தில் இசை பற்றிய நேரடியான குறிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் உருவெளித்தோற்றமாக அறைச்சுவருக்குள் ஊடுருவி வரும் அந்தப் பெண் இசை வடிவமின்றி வேறென்ன ?

  1. https://www.npr.org/2014/12/02/363836249/watch-your-head-when-checking-out-murakamis-strange-library

 

  1. ஜி. குப்புசாமியின் வினோத நூலக மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

மீண்டும் சில குறிப்புகள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு இக்கட்டுரையினை வாசிக்கின்றேன். இலக்கியக் கோட்பாடுகளின்  மீது நிறைந்த நம்பிக்கை இருந்த நாட்களில் எழுதியவற்றை மிகுந்த கவனமெடுத்து வாசித்து, அதைப்பற்றி உரையாடி பிரசுரிக்கவும் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் இருவருக்கும் நன்றிகள். பின்னொரு நாளில் வெண்பளிங்கு மாளிகைக்குள் பிணைக்கப்பட்டிருந்த கல்குதிரைகளுக்குள் இப்புனைவினைப் பார்த்தேன். கட்டுரையின் எப்பகுதியிலும் கல்குதிரை பற்றி குறிப்பிடாதது என் அறியாமை. இப்புனைவின் முதலுருவம் கல்குதிரை. நானறிந்து தகவல்கள், ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் பார்த்த முகமறியா யாழினிக்கு நன்றிகள்.

சில திருத்தங்கள்

Surrealism தொடர்பான வரைவிலக்கணம் ஒன்று ஜெயமோகனால் கொடுக்கப்பட்டதாக இந்தக் கட்டுரையில் மின், அச்சுவடிவம் இரண்டிலும் பிரசுரமாகியிருந்தது. பிரக்ஞையுடன் அதை அழிக்கிறேன்.

279 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top