Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

மொண்ணைக்குறிப்பு – 2

மொண்ணைக்குறிப்புகள்

 1. முன்கதைச் சுருக்கம் -//நிற்க, அப்படி ஒரு தீவிர வாசகனைத்தான் அதிஷ்டவசமாகக் கொழும்பில் சந்தித்தேன்.
  சதா தேவகாந்தனின் கனவுச்சிறைதான் தமிழிலேயே சிறந்த நாவல் எனப் பேசிக்கொண்டே இருந்தார். மலேசியா வந்து இரண்டு வாரத்திற்குப் பின்பும் அவரது வல்லினம் வருகையைக் கிண்டலடித்திருக்கும் அவரது வலைப்பதிவில் தேவகாந்தனின் கனவுச்சிறை சிறந்த நாவல் என்ற குறிப்பும் இருந்தது. அவர் இணையத்தளத்தில் புகுந்து ஆராய்ந்தேன். அதை மீறி அது ஏன் சிறந்த நாவல் என ஒரு பதிவை அவரால் விரிவாக எழுதமுடியவில்லை. இந்த மெத்தனம்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தைக் கொன்றது. இந்த அசட்டுப்பேச்சுகளை உதிர்ப்பவர்கள்தானே பின்னர் அந்நாட்டின் படைப்பாளிகளாகி விடுகிறார்கள். தங்கள் இலக்கியச் சூழலைத் தற்காத்து கேலியான ஒரு மொண்ணைக்குறிப்பை எழுதியதால் அவர் இலங்கை இலக்கியத்தில் கவனிக்கப்படும் எழுத்தாளராகிவிடுவார் இல்லையா.// – நவீன்.
 2. ஒரு கதையும் சில கிளைக் கதைகளும் – குடோன்களை பெரும்பாலும் கீழ்த்தளத்திலே பார்த்திருந்த எனக்கு மேற்தளத்தில் இருந்த குடோனைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து உடனே மீள முடியவில்லை. “கீனோ” வினை ஒரு பேரூந்துப் பயணத்தில் வாசித்திருந்தேன். அதன்மூலம் ஸ்ரீதர் ரங்கராஜ் எனக்கு அறிமுகமாகியிருந்தார். பின்னர் முகப்புத்தக நட்பிலும் இணைந்தோம். எல்லோரும் வலு தீவிரமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். பொருத்தமான வழிகாட்டலுடன் புகைப்படச் சடங்கு முடிந்ததும் கூட்டம் கலையத்தொடங்கியது. எந்தப் புகைப்படத்திற்கும் என்னை அழைக்கவில்லை என்பதை இப்போது நினைத்து உள்ளூர சந்தோசித்துக்கொள்கிறேன். கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே தாயாஜியிடம் வல்லினம் 100 பிரதி ஒன்றைக் கேட்டேன். கைவசம் இல்லை என்றார். சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். கலைந்துகொண்டிருந்த அந்த மெலிவான கூட்டத்திற்குள் ஸ்ரீதர் ரங்கராஜை கண்டுபிடித்து என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் கீனோ பற்றிய என் அபிப்பிராயத்தை முன்வைத்தேன். இருவருக்குமான ஆரோக்கியமான உரையாடலின் தொடக்கமாக இது இருந்தது. மொழிபெயர்ப்பு, மூலப்பிரதியினை வாசித்த பின்னர் மொழிபெயர்ப்பை வாசித்தல், மொழிபெயர்ப்பிலுள்ள இடர்கள், மொழிபெயர்ப்பின் தேவைகள் என்று குடோன், குடோன் வெளித்தளம், படிகள், கண்ணாடி பொருத்தப்பட்ட கீழ்த்தளத்தின் இடைச்சுவர், ரசீது சரிபார்க்கும் மேசை என்று சிறிது நேரம் உரையாடல் நீண்டது. இந்த உரையாடலின் இடையில் தேவகாந்தனைப் பற்றியும் கனவுச்சிறையைப் பற்றியும் ஸ்ரீதர் ரங்கராஜிற்கு அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது என்று “கிளைம்” பண்ணினேன். பின்னர் கலிங்கு நாவலையும் ஆதித்தாய் சிறுகதை தொகுப்பையும் அறிமுகம் செய்தேன். அதன் பின்னர் தொடர்ந்து உரையாடிக்கொண்டு போனோம். இடையில் அவர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் பற்றிய சலசலப்புகள் வந்தன. பேசிக்கொண்டே வாசலை அடைந்தோம். அப்போது தான் நவீன் எங்களுக்கண்மையில் வந்தார். நான் ஸ்ரீதர் ரங்கராஜிடம் சொல்லிவிட்டு நவீனிடம் சென்று கைகுலுக்கி அறிமுகமானேன். முப்பது செக்கன்கள் கூட நீளாத சந்திப்பு, உடனடியாக முடிந்தது. அவர்களை ஏற்றும் வான் வந்தது. கிளம்பிவிட்டார்கள். இங்கு “நிற்க” வேண்டாம் மூன்றாம் குறிப்பாக மிகுதியை எழுதுகிறேன்.
 3. முப்பது செக்கனும் தீவிர வாசகனும் – முப்பது செக்கன் உரையாடலில் என்னைத் தீவிர வாசகனாக உணர்ந்துகொண்ட நவீனுக்கு இலங்கையில் இலக்கியம், அரசியல், பொருளாதாரம், யாப்புகள் மற்றும் இன்னபிற பௌதீக உருவ, அருவ,அருவுருவ கூறுகளை உணர்ந்துகொள்ள ஏழு நாட்கள் என்பதே அதிகம் எனக் கருதுகிறேன். “ஒரு கதையும் சில கிளைக் கதைகளும்” என்ற குறிப்பை மறந்துவிடுங்கள். “சதா தேவகாந்தனின் கனவுச்சிறைதான் தமிழிலேயே சிறந்த நாவல் எனப் பேசிக்கொண்டே இருந்தார்.” இப்படியான ஒரு பொய்யினைச் சொன்னால் பூபாலசிங்கம் புத்தக கடையின் சிற்றூழியர் கூட நம்பமாட்டார். வேண்டுமென்றால் அங்கிருக்கின்ற கண்காணிப்புக் காமராகளை சாட்சியாக அழைக்கிறேன். பெரும்பாலும் நான் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன் என்று ஸ்ரீதர் ரங்கராஜ் உங்களுக்கு கூறியிருக்கக்கூடும். ஆனால் மேற்கூறியதை விட, Kafka on the Shore பற்றியும் Norwegian Wood பற்றியும் பேசியதையும் சேர்த்துக்கூற மறந்துவிட்டார் போலும். அதன் பின்னர் முகப்புத்தகம் வழியாக வரலாறும் புனைவுகளும் பற்றியும் இலக்கிய அறம் பற்றியும் இலக்கிய அரசியல், தனிமனித இலக்கிய படைப்புச் சுதந்திரம் என்று தொடர்ந்து உரையாடியவையெல்லாம் ஆவியாகிப்போக தேவகாந்தனின் கனவுச்சிறையைப் பற்றி பேசிய சில நிமிடங்களை மட்டும் கருத்தில்கொண்டு சதா தேவகாந்தன் துதி பாடுகிறேன் என்றால் ஸ்ரீதர் ரங்கராஜின் அறம் எதற்குள் ஒளிந்துகொள்ளும். ” மன்னிக்கணும் நவீன் நீங்க இதுக்க எப்ப வந்தீங்க? ” இவ்வளவு அசட்டுப்பேச்சையும் கட்டுரையில் கொட்டிவிட்டு நான் கிளைம் பண்ணியதை அசட்டுப்பேச்சு என்று சொல்லும் உங்கள் தன்னடக்கம் மெய்சிலிர்க்கிறது( தேய்வழக்குத் தான் இது உங்களுக்கு போதும் ).
 4. “இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்” என்று இந்தப்பெரிய தற்காப்பு குறிப்பொன்றை உதிர்த்துவிட்டு “தங்கள் இலக்கியச் சூழலைத் தற்காத்து கேலியான ஒரு மொண்ணைக்குறிப்பை எழுதியதால்” என்று எழுதுவதில் பெரிய நியாயங்கள் இருப்பதாக தெரியவில்லை. எப்படி கனவுச்சிறை பெரும்பொருள் ஆனதோ அதே மாதிரி இந்த மொண்ணை என்னும் வார்த்தை பிடித்துப்போய் இப்படி எழுதவேண்டியதாகப்போயிற்று.

மொண்ணைக்குறிப்பிற்கான பின்குறிப்புகள்

 1. முன்குறிப்பு முழுக்க என்னைப்பற்றி எழுதியவற்றிக்கு நன்றி செலுத்தும் படலம் நடந்தது. இப்படி விளிப்பதனால் பின்குறிப்புகள் வேறொன்றைப் பற்றி பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அதன் மிச்ச சொச்சம்தான் இது .
 2. “அவர் இணையத்தளத்தில் புகுந்து ஆராய்ந்தேன். அதை மீறி அது ஏன் சிறந்த நாவல் என ஒரு பதிவை அவரால் விரிவாக எழுதமுடியவில்லை. இந்த மெத்தனம்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தைக் கொன்றது.” ஏன் சிறந்த நாவல் என்று என்னோடு விவாதித்திருக்கலாம் நவீன். அதை விட்டுவிட்டு இணையதளத்திற்குள் உலாவி பதிவைத்தேடி, அது இல்லை என்றவுடன் விரிவாக எழுதவில்லை – மெத்தனம் – இலக்கியத்தை கொன்றது போன்ற சொற்களை பாவித்து உங்கள் கருத்தை முன்வைப்பது ஸ்ரீதர் ரங்கராஜ் பாணியில் மிகப்பெரிய கிளைம் அல்லவா. நான் அறிமுகப்படுத்திய பின்னரே தேவகாந்தனை அறிந்த நீங்கள் இன்னமும் கனவுச்சிறையை வாசித்து – ஏன் வாங்கிக்கூட இருக்க மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது. உங்கள் கூற்றின் படி நான் உங்களுக்கே(நவீன்) கிளைம் பண்ணியதாக இருக்கட்டும். உடனே மறுத்துப்பேசியிருக்கலாமே. முப்பது செக்கன்கள் கொஞ்சம் அதிகம் என்றாலும் முயற்சித்திருக்கலாம். முன்கதைச்சுருக்கத்தில் சொன்னது போன்ற மூன்றாம் நபர் கூற்றை உங்கள் கூற்றுப் போல எந்த பிரக்ஞையும் இல்லாமல் சொல்வதை விடவா எனது கிளைம் இலக்கியத்தைக் கொல்லப்போகிறது.
 3. நவீன இலக்கிய கிளாசிக்(நிதானமான புரிதலுக்குரிய தொனியில்/வேகத்தில் வாசிக்க) -வெட்டுக்கிளியும் அடர் வனமும் (aka) மொண்ணைக்குறிப்பு 01 இல் Italo Calvino எழுதிய கிளாசிக்குகள் பற்றிய கட்டுரையின் இணைப்பினை கொடுத்திருந்தேன். தமிழ்ச் சூழலில் கிளாசிக்குகள் உருவாகின்ற சூழல்கள் எல்லாம் கடத்தப்பட்டுவிட்டன என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஒரு கிராமம் போரினால் முற்றாக சிதறிப்போன கதையினை அரசியல் சார்பின்றி மனித அறத்தில் நின்று விரிக்கிறது கனவுச்சிறை. ஒவ்வொரு வாசிப்பும் இன்னொரு தளத்தில் இன்னொரு பார்வையில் (இதுவே மறுவாசிப்பு) விரிகின்ற எல்லாச் சாத்தியங்களும் நாவலிற்குள் இருக்கின்றன. கதை மாந்தர்கள் – கையாளப்படுகின்ற முறைமை – அடையாளப்படுத்துகின்ற முறைமை – அடையாளங்கள் மாறுகின்ற தன்மை – அடையாள அழிப்பு என்று ஒரு சமூகத்தின் கிளாசிக் கனவுச்சிறை.
 4. மேலும் வாசிக்க – https://arunmozhivarman.com/2015/09/01/தேவகாந்தனின்-கனவுச்சிறை/ – மேலதிக தகவல் – இந்தக் கட்டுரையினை எழுதியவர் இங்கிலாந்தின் Gloucestershire ஐச் சேர்ந்த எழுத்தாளர்.
 5. இன்னொரு கிளைமும் உள்ளூர சந்தோசிப்பும் – என்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கேட்டதே கிடையாது. படைப்பாளி என்று கூடச் சொன்னதில்லை. 57 முறை மலேசியா – சிங்கப்பூரிலிருந்து என் தளத்தை பார்வையிட்டதன் மூலமும் முப்பது செக்கன் உரையாடல் மூலமும் “அவர் இலங்கை இலக்கியத்தில் கவனிக்கப்படும் எழுத்தாளராகிவிடுவார் இல்லையா ” போன்ற உள்ளூர கிளர்ச்சியைத் தருகின்றன கூற்றினை கிளைம் பண்ணுகிறார் நவீன். நன்றி ம. நவீன்.

சில சீரியஸான(தீவிரமான) குறிப்புகள்:
“எனக்குத் தெரிந்து பேராசிரியர் நுஃமான் மட்டுமே மலேசிய புத்தக நிறுவனத்துக்கும் (உமா பதிப்பகம்) இலங்கை பூபால சிங்கம் புத்தக நிறுவனத்துக்கும் இணைப்பை ஏற்படுத்தி இரு நாட்டுக்குமான புத்தக பகிர்வை ஏற்படுத்த முதற்கட்ட முயற்சியை மேற்கொண்டார். இங்குள்ள மலாய் கவிதைகளை மொழிப்பெயர்த்து இலங்கையில் அறிமுகம் செய்தார். இம்முறை அவர் துணையுடன் இந்தப்பயணத்தில் எங்கள் கண்களில் பட்ட 200க்கும் குறையாத இலங்கை நூல்களை மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக தமிழ் நூலகத்தில் சேர்த்துள்ளோம். ஓரளவு நல்ல சேமிப்பு. இனி அங்கிருந்து இலங்கை இலக்கிய அறிமுகங்கள் தொடங்கலாம். இதை செய்ய எழுத்தாளன் தேவையில்லை. அந்நாட்டில் இலக்கிய வாசகனாகச் சொல்லிக்கொண்டிருக்கும் யாரேனும் கொஞ்சம் முயன்றாலும் செய்திருக்கலாம். ஆக, அறிவுழைப்பில் எழுத்து, உரையாடல், விமர்சனங்கள் வழி படைப்புகளையும் முன்னெடுக்க முடியாத; உடல் உழைப்பில், இருக்கின்ற நூல்களை தமிழ் புழங்கும் தேசங்களில் பரவச்செய்யவும் முடியாமல் (அங்கு ஏதோ இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும்) வாசகப் பரப்பு என்னதான் செய்கிறது? உங்கள் பணிதான் என்ன? அப்படி ஒன்றும் இல்லையென்றால் உங்கள் நாட்டு இலக்கியத்தை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ள ஒரு படைப்பாளி குறித்த வசைகளைப் பொழிய உங்களுக்கு என்ன அருகதை உண்டு?” – நவீன்
வாசகர் பரப்பின் பணிகளாவன,
இருநாட்டு புத்தக நிலையங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தல்
வேற்று மொழிக்கவிதைகளை மொழிபெயர்தல்
அறிவுழைப்பில் எழுத்து, உரையாடல், விமர்சனங்கள் வழி படைப்புகளையும் முன்னெடுத்தல்
இருக்கின்ற நூல்களை தமிழ் புழங்கும் தேசங்களில் பரவச்செய்யதல் (இங்கு ஏதோ இருப்பதாகச் சொல்லிக்கொள்வதால்)
அப்படியானால் வாசிப்பது அவர்களின் பணி இல்லையா?

 1. இங்கிருக்கும் எல்லா தீவிர- நவீன இலக்கிய வாசகர்களும் உங்களைப்போல பணபலம் படைத்தவர்கள் கிடையாது. அப்படிப்படைத்திருந்தாலும் சிங்கப்பூர் – மலேசியா சுற்றுப்பயணம் செய்து 100 புத்தகங்களை இங்கிருக்கின்ற அலமாரிகளுக்குள் அடுக்க என்ன இருக்கிறது அங்கு?( உங்கள் தொனியில்)
 2. “நான் சந்திக்காத அந்தத் தரமான வாசகர்கள் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் மேலும் இலங்கையின் சமகால இலக்கியத்தை அறிய உதவியாக இருக்கும்.” – நான் சந்தித்த வாசகர்கள்/ எழுத்தாளர்கள்/பத்திரிகையாளர்கள்/நூலகர்கள் செய்த பணிகளை பட்டியலிடுமாறு நான் வேண்டினால் என் செய்வீர்? வல்லினம் இலக்கிய குழுமத்தின்( இப்போது பலத்த சந்தேகம் எழுந்துவிட்டது) பிரதிநிதிகளாக நீங்கள் அழைத்துவந்தவர்கள் ஆவணப்படுத்திய – பதிவேற்றிய சிங்கப்பூர் – மலேசியா இலக்கிய செயற்பாட்டாளர்கள் தொடர்பான பணிகளின் பட்டியலாக அமைந்திருத்தல் நன்று.
 3. “இம்முறை இலங்கை பயணத்தில் மு.பொன்னம்பலத்தின் தொகுப்பில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வந்திருக்கும் ‘மு.தளையசிங்கம் படைப்புகள்’ எனும் மொத்தப்படைப்புகள் தொகுப்பை வாங்கினேன். இதை சொல்ல காரணம் உண்டு. ஒரு வாசகனான நான் தமிழ் இலக்கியம் புழங்கும் ஒரு மண்ணின் பிரதான கலைஞனைத் தேடி அடைவது தமிழகத்தில் இருக்கும் விமர்சகர்கள் வழி. தெளிவத்தை ஜோசப் எனும் ஒரு படைப்பாளியை அறிந்ததும் ‘குடை நிழல்’ நாவலை வாசித்ததும் விஷ்ணுபுரம் விருதுக்குப் பின்பே.” – நான் நவீனை அவரோடு வந்திருந்த மற்றவர்கள் எழுதிய விமர்சன, திறனாய்வுக்கட்டுரைகள் மூலமும், வல்லினத்தினை மலேசிய சிங்கப்பூர் தீவிர இலக்கிய வாசகர் எழுதிய பதிவின் மூலமும் தான் அறிந்தேன். சிரிப்பாக இல்லையா நவீன்? கோணங்கியும் ஜெயமோகனும் தான்.

அதி தீவிர நவீன இலக்கிய வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தேடிவந்த நீங்கள் ஏன் ஒரு இடத்தில் கூட “புதியசொல்” இதழைப் பற்றி எழுதவில்லை. நீங்கள் வருவதாகவும் கட்டாயமாகவும் சந்திக்கச் சொன்ன கிரிஷாந்த் பற்றியும் ஈழத்தை அடிப்படியாகக் கொண்டு இயங்குகின்ற சிறுபத்திரிகையான புதிய சொல் பற்றியும் நீங்கள் எழுதியிராதது மறதியின் காரணாமாக இருக்கலாம் என்று இந்தச் சிறுமனம் சொல்லுகின்றது.
முடிவுரை மற்றும் இன்னும் சில மொண்ணைக் குறிப்புகள்

 1. மொண்ணைக்குறிப்புகள் 01 அதாவது வெட்டுக்கிளியும் அடர்வனமும் பகடியாக எழுதப்பட்ட ஒன்று அல்ல. நவீனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அல்ல. ஜெயமோகன் வைத்த ஐயம், எதன் அடிப்படையில் எழுந்தது, ஏன் அதை எதிர்க்கிறேன் என்பதைப்பற்றியது தான். மொண்ணைக்குறிப்புகள் 02 பகடியானது – அதற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் – நவீன்! உங்களிடம் இல்லை.
 2. இதில் தன்னிலை விளக்கம் மட்டுமே இருக்கிறது, அதை மீறி விவாதிக்க உங்கள் கட்டுரையில் ஆழ்ந்த பொருள் எதுவும் இல்லை. ஒரு உலக சுற்றுப்பயணம் ஒன்று செய்வதாக திட்டமிட்டிருக்கிறேன். இந்தியா 7 நாட்கள் பாகிஸ்தான் 6 நாட்கள் அங்கிருந்து அல்ஜீரியா 5 நாட்கள் மேலே இங்கிலாந்து 4 நாட்கள் ஸ்பெயின் 3 நாட்கள் ஜப்பான் 2 சீனா 1 மலேசியா 1/2 சிங்கப்பூர் 1//4 நாட்கள். எல்லாம் முடித்து வந்து “வேர்வை பியர் : உலகப் பயண அனுபவங்கள்” என்று கறாரான கட்டுரை ஒன்றினை எழுத இருக்கிறேன். கோபமாக கட்டுரை எழுதி பதிவதை நவீன் வழக்கமாக கொண்டிருக்கலாம். ஆனால் அது முறையல்ல. அதைவிட, ஜெயமோகன் விவாதித்தல்,எதிர்வினை ஆற்றல் போன்றவை குறித்து எழுதியதை நவீன் வாசித்திருப்பார். சில நேரம் மறந்திருக்கலாம். அதனால் இப்போது இணைக்கிறேன்.
 3. 1. என்னுடன் விவாதம் செய்பவர் என் மீது அடிப்படை மரியாதை உடையவராக இருக்க வேண்டும். என்னை அயோக்கியன் என்றோ முட்டாள் என்றோ சொல்லும் ஒருவரிடம் என்ன விவாதிப்பது? நான் அயோக்கியன் அல்ல முட்டாள் அல்ல என்றுதான் அவ்விவாதம் அமையும். அது விவாதித்து நிறுவப்படவேண்டிய ஒன்றாக நான் நினைக்கவில்லை
  2. எனக்கு நான் விவாதிப்பவரிடம் மரியாதை இருக்கவேண்டும். அவரது கல்வி, நுண்ணுணர்வு, நேர்மை மீதான நம்பிக்கை இருக்கவேண்டும். ஒருவரிடம் நான் விவாதிக்கிறேன் என்றாலே அவரை நான் எனக்கு நிகரானவராகவோ அல்லது என்னை விட மேலானவராகவோ நினைக்கிறேன் என்றுதான் பொருள். மட்டம்தட்டுவதற்கான விவாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை3. விவாதம் விவாதப்பொருள் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும், தனிமனிதர்களைச் சார்ந்ததாக அல்ல.
  4 விவாதத்திற்கு ஒரு பொதுமுறைமை இருக்கவேண்டும். ஒன்றை நிரூபிப்பதற்கு கையாளும் வழி முறை இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
  5 விவாத மொழியில் அந்த தர்க்கத்தன்மை இருக்கவேண்டும். வெற்று உணர்ச்சிகள் அல்லது உணர்ச்சிப்பாவனைகளுடன் விவாதிக்கமுடியாது
  5 நல்ல விவாதமென்பது விவாதிக்கும் இருதரப்புக்கும் நலமளிக்கவேண்டும். கவனிப்பவர்களுக்கு பயனளிக்கவேண்டும்
  (https://www.jeyamohan.in/61256#.Ws-sQdNuau4)
 4. மொண்ணைக்குறிப்புகள், கதைகள், உப கதைகள் எல்லாம் இத்தோடு நிறைவு பெறுகின்றன.

ஒரு சிறிய சினிமாக்குறிப்பு

 1. குருவி படம் பார்த்திருப்பீர்கள், அதில் விவேகின் பயணம் பார்த்திருப்பீர்கள், ஞாபகம் வந்தது சும்மா சொன்னேன்.
268 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

One thought on “மொண்ணைக்குறிப்பு – 2

 1. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்ததை பற்றிய சிறு தகவலை இணைக்க விரும்புகிறேன்.
  நவீன் ‘உதிரக் கள்’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிருஷ்ணன் சாட்சாத் நானே, அவருக்கு எனது பெயர் தெரிந்திருக்கவில்லை, நான் ஒரு அறிவிப்பாளராகவே அவருடன் அறிமுகமாகியிருந்தேன். நிகழ்வில் மைக் வைத்து அடுத்தது யார் என்று சொல்வது தான் என் பணி. புதிய சொல் இதழ்களை அவரிடம் கொடுத்திருக்கிறேன், தொடர்ச்சியாக இதழ்களை வாங்குவதாக சொல்லியிருந்தார். நானோ அல்லது இங்கிருக்கும் பிற வாசகர்களோ, அவர்களை சந்தித்து விரிவாக உரையாடும் நேரம் வாய்க்கவில்லை.
  அவர், தனது மதிப்பீடுகளை உருவாக்கும் விதத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது. நான் அரங்கில் கேள்வி கேட்க்கும் தேவையிருக்கவில்லை, நான் ஏற்கனவே வல்லினத்தை வாசித்துக்கொண்டிருப்பவன். அவர்கள் எளிமையான ஒரு அறிமுகத்தை தங்கள் செயற்பாடுகள் சார்ந்து முன்வைக்க வந்திருந்தார்கள்.
  மலேசியச் சூழலை அறிமுகம் செய்வதே அவர்களின் நோக்கம், ஈழ இலக்கியம் எப்படி நகர்கிறதென்பதை கருணாகரனிடம் போய்க் கேட்டால், நாம் என்ன செய்வது.
  – கிரிஷாந் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top