Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

மூன்று மௌனங்கள்.

தோள்ப் பையினை ஒரு தோள்மூட்டிலும் மற்றைய கையில் காகிதங்களுடனும் வேகமாக பன்னிரண்டாம் வாட் என்ற பெயர்ப்பலகையைத் தாண்டி நடந்துகொண்டிருந்தேன். நான் போகவேண்டிய இடம் பன்னிரண்டாம் வாட்டிற்கு எதிரில் அமைந்திருக்கின்றன மார்பு சோதிக்கும் நிலையம். காலை எட்டிலிருந்து மின்தூக்கிகளிலும் படிகளிலும் வரிசைகளிலும் நின்று வாடி வெறுத்துப்போயிருந்தேன். நேரம் இரண்டு முப்பதைத் தாண்டியிருக்க வேண்டும். பன்னிரண்டாம் வாட் – மருத்துவமனையின் தொங்கலில் இருக்கின்றது. அங்கிருந்த ஒரு தாதி வழி காட்டும் போது கையினை விரித்து நீட்டிய விதமே நீண்ட தூரத்தினை காட்டியது. காலையில் குடித்த தேநீர் செமித்து சிறு குடல்கள் அலறத் தொடங்கி வெகு நேரம் ஆகிவிட்டது. பெயர்ப்பலகையைத் தாண்டி நடைபாதையினூடு நுழைந்து நடந்து செல்ல கத்தியும் அழுதும் சத்தம் கேட்டது. என்னை அச்சத்தம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. காலை மருத்துவமனைக்குள் நுழையும் போதே அலறல் சத்தம் தான் வரவேற்றது. வெளிநோயாளர் பிரிவின் கீழ்தள வெளியிலிருந்து மேலே பார்க்க – அத்தனை மாடிகளிலும் இருந்து பெரும் கூட்டம் அலறலையும் சோகத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த ஓலத்திற்கு முன் இது ஒன்றும் பெரிய சத்தம் இல்லை. நேராக பன்னிரண்டாம் வாட்டை அடைந்தேன்.
தோற்றமே சிறுவர்களுக்கான பகுதி போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மூன்று மொழியிலும் ஏதோ சில வசனங்கள் கருத்துக்கள் எழுதியும் ஒட்டியும் இருந்தார்கள். அழுகைச் சத்தம் என்னை நெருங்கியது. வாட்டின் வெளிப்புறம் சிறைச்சாலை போல வெள்ளை கம்பிகள் போட்டு அடைத்த அறைகளை அவதானித்தேன். அதனுள் பெரும்பாலும் காலியான கட்டில்களே இருந்தன. இருந்த மூன்று அறைகளில் மூன்றாம் அறையில் கட்டில் மூலையை பிடித்த வண்ணம் ஒரு தாய் நின்று கொண்டிருந்தாள். அவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதை இனங்காண இலகுவாக இருந்தது. அழுகையின் சத்தமும் அந்த அறைக்குள் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. சிவப்பு நிற மேலங்கியும் நீல அரைக்காட்சட்டையும் போட்டுக்கொண்டு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் வெள்ளைக்கம்பிகளை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனைப் பார்த்த அடுத்த கணமே அவனின் அம்மாவைத் தான் உற்றுப் பார்த்தேன். அவரின் கண்கள் காவிக்கொண்டிருந்த வெறுமை- அவரின் கைகள் கட்டிலின் நுனியை பிடித்திருந்த முறை – அவரின் பார்வை மகனை பார்க்காமல் வெளியே எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த விதம்- அனைத்தும் என்னுள் கலந்தன. சிறையின் கம்பிகளுக்குள் இருக்கின்ற ஒரு பறவையின் ஏக்கம் அவனின் தளர்ந்த பிடிப்பில் தெரிந்தது. எத்தனையோ முறை கெஞ்சியும் கொஞ்சமும் விலகிக்கொடுக்காத கம்பியிடமும் விலக்கிக்கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற தாதியிடமும், பேசுவதைப்போல அந்த அழுகை தெரிந்தது. அதுவரை இரைச்சலைப் போல தோன்றிய அவனின் அழுகை, அதன் பின்னர் உன்னதமான மொழியாக கேட்டது. அருகில் சென்று அவன் கிடந்த கம்பியின் அருகில் இருந்தேன். அவனின் கண்கள் இரண்டும் பொண்டிப் போய் இருந்தது. மூக்கு வழிந்து கொண்டிருந்தது. அவனிற்கு மூச்சு இரைத்தது. ஒரு கணம், ஒரே ஒரு கணம் அவன் என் கண்களை பார்த்தான். பின்னர் மெதுவாகத் திரும்பி அம்மாவைப் பார்த்தான். பின் தாதியை. அப்போது அவன் அழவில்லை. ஏதோ ஒன்றைக் கடத்தியிருக்கிறான். என்னை அவன் யாராக எண்ணியிருப்பான்? மருத்துவராக , தாதியாக , உறவினராக , தம்பியாக , பிள்ளையாக , மனைவியாக , கடவுளாக , எமனாக , கொள்ளைக்காரனாக எதுவாக? என்னால் அவனின் பார்வையையும் கணப்பொழுதில் அவன் கடத்திய மொழியையும் சற்றுக்கூட உணர முடியவில்லை.
அந்த தாதி என்னைப்பார்த்து சிரித்தார்.என்னால் அந்த கம்பிகளைத் திறந்த விடமுடியாது என்ற கர்வச் சிரிப்பு அது. பின்னர் தாதி என்னோடு கதைத்து, போகவேண்டிய இடத்தைக் காட்டினார். எல்லாம் முடித்து மருத்துவமனைக்கு வெளியில் வந்து நின்று ஒரு முறை யோசித்தேன், அவனின் அழுகை எதற்காக ? காலை அழுத உறவினர்களின் அழுகை எதற்காக?
அவன் எங்களைப் பார்த்து அழுகிறானா? அவனிற்கு- நாங்கள் சிறைக்கம்பிக்குள் இருப்பது போலத் தெரிகிறதா? எங்கள் வாழக்கையைப் பார்த்துத்தான் அழுகிறானா? எங்கள் அவலங்களை அவன் உணர்ந்துகொண்டு புலம்புகிறானா? அவன் என்னை மீட்கத் தான் அந்த பார்வையை பார்த்தானா? அந்த மௌனமான பார்வை என்னை நோக்கிய கருணையின் வடிவமா?
அழுத உறவினர்கள் எல்லோருமே இறந்தவர் இவ்வுலகைவிட்டு போய் விட்டார் என்று அழுகிறார்களா? இல்லை போய்விட்டாரே என்ற பொறாமையின் வடிவமா அந்த அழுகை ?
அந்த சிறுவனின் கண நேர மௌனமும் இறந்தவரின் நிரந்தர மௌனமும் எனக்குள் எதையோ ஒன்றை விதைத்துச் சென்று விட்டன.
148 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top