Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

பாதுகை – எடை இல்லாத கலை

கோமாளி கிங்ஸ் பற்றிய எனது பார்வையினை பலர் விமர்சித்திருந்தார்கள். நான்கைந்து நேரடி விவாதங்களிலும் கலந்துகொண்டேன். எனக்கு எதிராக வைக்கப்படுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் அதே கட்டுரையில் பதிலிருக்கின்றது. நான் எதிராக விமர்சிக்கிறேன் என்ற புள்ளியில் நின்று என்னை அணுகுபவர்கள் “எதற்காக விமர்சிக்கிறேன்” என்று கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இதனால் அவர்களுடனான விவாதங்கள் அயற்சியளிக்கின்றன. “எப்போது சினிமா என்ற பொழுதுபோக்கு கலையாகின்றது” என்ற கேள்வியினை மீண்டும் மீண்டும் தமக்குள் கேட்டுக்கொண்டும் அகமும் புறமும் தேடிக்கொண்டும் இயங்க வேண்டிய தேவையினை நம்மவர்கள் உணரவேண்டும்.
 
பிரெஞ்சு திரைப்பட இயக்குனரும் கதாசிரியருமான Alain Resnais, சினிமாவை “Manipulation of Reality through image and sound“¹ என்கிறார். எதார்த்தத்தை என்பதை வெளிப்படுத்துவதில்  நுட்பமான பல விடயங்களைக் கையாளலாம். அதற்கான வெளி-சுதந்திரம் சினிமாவில் உண்டு. எல்லையற்ற இந்தச் சுதந்திரத்தின் மூலம்  எதார்த்தத்தை மூடி மறைத்துவிட முடியும். ஆனால் இது அறமாகாது. இந்த அறம் ஒவ்வொரு மொழிக்கும் தேசத்திற்கும் தனிநபருக்கு வேறுபடும். ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய தனித்த அறத்தில் நின்று செயற்படுகின்றோம். இலங்கை – ஈழத்து சினிமாவை பொறுத்தவரையில் எமக்கான கூட்டு அறம் ஒன்றினை வரையறுக்கவேண்டிய கட்டாயத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். அது சுதந்திரம் ஒன்றை வேண்டிநிற்கின்ற ஒரு இனத்தின் அறமாக இருக்கவேண்டும்.
 
மதி சுதாவின் குறும்படமான  “பாதுகை“² யினை முகப்புத்தகத்தினூடாக பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. கதைப் போக்கிலிருந்து உண்மைக்கதை ஒன்றின் தழுவலாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கிறேன். தொழில்நுட்ப உத்திகள், நேர்த்தியான ஒலிப்பதிவு போன்றவை இல்லாமலும் ஒரு நெருக்கமான கலைப்படைப்பினை உருவாக்கியிருக்கிறார் மதிசுதா. இன்று கிராமங்களுக்கு மின்சாரம், வசதியான குடிமனைகள், சீரான வீதிகள் என்று எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டாலும், எப்போதும் போல இவை ஒவ்வொன்றிலிருந்தும் விலக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற  குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் தனி ஒருவராக குடும்பத்தை நடத்துகின்றவர்களையே பாதிக்கின்றது. பாதுகை இங்கிருந்து அணுக்கமாகத் தொடங்கின்றது. குறும்படத்தில் வருகின்ற பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் எமது நாளாந்தத்தின் பிரதிபலிப்புகளாக காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. இதுவே காட்சிகள் – கலையாக மாறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. கீரைப் புட்டிலிருந்து அதை வைத்து சாப்பிடும் கோப்பையின் வடிவம் வரை எமக்குரியது என்ற மனநிலையை உருவாக்குவதன் மூலம், இது ஈழத்து சினிமா என்று உணர்வினை இயக்குனர் ஏற்படுத்திவிடுகிறார். இயல்பான வன்னியின் மொழிப் பிரயோகம் உணர்வு நிலை உரையாடல்களை பலமாக்குகிறது.
 
பாதுகையின் கதை மீது எனக்கு ஈர்ப்பில்லை. “Land without people are lands without History“³ என்ற  J.R.Michell இன் புகழ்பெற்ற கூற்று ஒன்றிருக்கிறது. இன்று வன்னி நிலப்பரப்பின் குக்கிராமங்களின் சுதேச குடிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மறுப்பதன்மூலம் – அல்லது தட்டிக்கழிப்பதன் மூலம் அக்கிராமங்கள்  “Land without people” ஆக்கப்படுகின்றன. அக்கிராமங்களின் அயல் காடுகளை செப்பனிட்டு சிங்களக்குடியேற்றங்களை அமர்த்துவதன் மூலம் வரலாறு மாற்றியெழுதப்படுகின்றது. இந்தக் களத்தில் நின்று மதிசுதா பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கதை நகர்வில் இதனை வலிமையாக காட்டியிருக்கலாம். மதிசுதா கதையின் மீது இன்னும் அவதானம் செலுத்தியிருக்கலாம். நீண்ட காலத்திற்கு ஆவணப்படுத்தல்களை காட்சிப்படுத்துவதன் மூலம் மட்டும் எமக்கான சினிமாவினை உருவாகிவிடமுடியாது.
 
குறும்படம் வெளிப்படுத்துகின்றன இன்னொரு முக்கியமான உண்மை, போருக்கு பின்னாலான வாழ்க்கை. தான் கட்டமைத்து வைத்திருக்கின்ற எல்லா சமூக கட்டமைப்புகளையும், பேரழிவு ஒன்றின் பின்னலான ஈழத்து தமிழ் சமூகம் மீண்டும் உருவாக்குகின்றது என்பதை குறும்படம் காட்டுகிறது. அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலை என்று ஒன்றிருக்க, தன் சமூகத்தாலேயே கைவிடப்பட்ட இன்னொரு நிலையும் எமக்குள் இருக்கின்றது. இதனை சாதியத்துடன் இணைக்கிறார். புற, அக காரணிகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் எளிமையான யதார்த்த உரையாடல்கள் மூலம் குறும்படம் நிரப்பப்படுகிறது.
 
பின்குறிப்புகள்
1. https://www.jstor.org/stable/3245771?seq=1#page_scan_tab_contents
2. https://www.youtube.com/watch?v=z_FQH9OpodI
3. Historical Geography, London, 1954 , p.41.

29351584_1902662689778192_8542491170371164585_o.jpg
 

314 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

One thought on “பாதுகை – எடை இல்லாத கலை

 1. மிக்க நன்றி சகோதரர்.. ❤ ❤ ❤
  முதலில் என் படைப்பை தங்கள் விமர்சனத்துக்காக எடுத்துக் கொண்டதற்கு பெரும் நன்றி ஒன்று.. காரணம் அந்நியப்படங்களில் மிக மோசமான படங்களுக்கு எழுத கொடுக்கும் நேரத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட பலர் எம் படங்களுக்கு ஒதுக்குவதில்லை என்ற மனவருத்தம் எனக்கு எப்போதும் உண்டு…
  விமர்சனப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரி பிழைகள் என்பன ஒரு விமர்சகனது கருத்துச் சுதந்திரமாக கருதுகிறேன். ஆனால் ஒரு படைப்பு தொடர்பான நல்லது கெட்டது தொடர்பான கலந்துரையாடல்களுக்கான களத்தை திறந்து விடுவதே அப்படைப்புக்கு கிடைக்கும் மிகப் பெரும் அங்கீகாரமாகும். கதை விடயத்தில் நில வர்ணனை தொடர்பாக ஒரு வசனத்தை மட்டுமே வைக்க முடிந்தது (இந்திய அரசால் கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்டங்களை பற்றி)
  மற்றைய விடயங்களுக்கு கதையின் 1st plot ஆரம்பித்த பின்னர் தாய் மகன் உறவு ஆரம்பமாகிவிட்டதால் story point of view அதை விட்டு வெளியே வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
  அதற்கு முன் கிடைத்த 4 நிமிடங்களுக்குள் தான் வட்டுவாகலில் இருந்து வற்றாப்பளை கோயில் என கொண்டு சென்றதுமல்லாமல் narration ஆல் தான் அதில் கூட பல விடயங்களை கூற முடிந்திருந்தது.
  இதற்கு மேல் திணித்தால் தாங்களே கடைசி பந்தியில் குறிப்பிட்டது போல ஆவணப்படுத்தலாக போய் விடும் என்பதால் தூக்கி எறிந்து விட்டிருந்தோம். ஆனால் ஒரு முழுப்படைப்பாக வன்னி என எட்டிப் பார்க்க வரும் போது geographical ஆக பல விடயங்களை கூறி இருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள்ளும் உண்டு.
  கதை குந்தவை என்ற கதாசிரியரின் சிறுகதையாகும். அக்கதையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரான காட்டமான விமர்சனங்களை முன் வைத்து எழுதப்பட்டிருந்தது. அதன் கதைக்கரு எனக்கு பிடித்திருந்ததால் குணேஸ்வரன் அண்ணாவின் மூலம் அனுமதி பெற்று எனக்கு ஏற்றது போல திரைக்கதைகளை மாற்றி கதைக்கான முடிவையும் கொடுத்திருந்தேன்.
  மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். மிக்க மிக்க நன்றிகள்… ❤ ❤ ❤
  ( இனிமேல் கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு படம் எடுக்கிறேன் என நல்ல கதைகளையும் என் மனதுக்குள் இருக்கும் திரை உருவாக்கத்தையும் சிதைக்க கூடாது என்ற முடிவுக்கு எப்போவோ வந்து விட்டேன் சகோ 😉 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top