Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

நின் கைவசம்  என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை  இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச்  சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.

மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக  வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து  மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து  நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித்  தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள்  நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப்  பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.

” வாறீங்களா?” என்றேன்.

“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன  கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.

ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,

” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”

முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என  நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன.  மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.

நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான  ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின்  கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த  பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.

” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “

எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது  கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம்.  எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது.  மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில்  மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன.  சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன்.  நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப்  பதிந்தன.

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனிதஉடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில்பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோபோவது
மாதிரிதோன்றுகிறது
உற்றுப்பார்த்தால்
யாருமில்லை

நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப  வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

” பேரிசையாய்க் கொட்டும் மழையில் யாரிவர்கள் நச்சரித்துக்கொண்டு ” நகுலன் தொடர்ந்தார், ” ஓரமாக எங்காவது போவோம், அமைதியான இடமொன்றிற்கு”

கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு  அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.

மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.

அந்தி மயங்கும் வேளை-
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது
அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி  இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.

சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.

மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று  நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச்  சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக்  கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.

சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “

மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”

“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்

எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை.  முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால்  எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது.  நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப்  பொறுக்கிச்  சேர்த்தேன்.

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச்சாகத்தான்
தெரியும்
நீஎன்னசொல்வாய்
என்றுஎனக்குத்தெரியும்
நீஎப்பொழுதும்
இப்படிச்
செத்துக்கொண்டிருக்கவேண்டும்
என்பதுதான்
என்விருப்பமும்
என்றாள்

வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று  பூனையின் திடீர்  கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த  நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,

” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,

சுசீலா
செத்துக் கிடந்தாள்
கழுகொன்று
அவள் முலையைக் கொத்திற்று
அவள் துவாரம்
நோக்கி எறும்புக் கூட்டம்.
பிணவாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான்;
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார்.

இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

குறிப்புகள். 

  1. நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
  2. இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.
377 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top