Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

சூன்ய மினுப்பு

(01)

கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலின் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் போது தான் நாம் உணர்த்தே இருக்கமுடியாத விதங்களில் பிரமாண்டமாக வெளிப்படுகிறது” என்று பாழி நிறைய பொறிகளாகவும் சாவிகளாகவும் வரலாற்றுக் கிண்ணத்தின் கரு மைத்துளிகளை விதைத்தார் கோணங்கி. மூன்றாம் மாடியின் ஓரளவுக்கு வசதியான அறையொன்றிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் எனக்கென்ற எந்த தொன்மமும் பண்பாடும் வரலாறும் இல்லாத வெறுமை தான் கிடைக்கப்பெற்றிருக்கிறது. மைதானமளவு வெறுப்பும் வயல் வெளியளவு அன்பும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. வாசித்த எல்லாப் பனுவல்களும் இசையாகவும்  ஓவியங்களாகவும் கொத்துக் கொத்தாக விரிகின்றன. சிலது வெறுங்காகிதங்களாகவும் இன்னும் சில அட்டை திறக்கப்படாமலும் கிடக்கின்றன. ஆனால் மிகச்சிலதிலிருந்தே இருகை விரிப்பளவு மூளையின் மடிப்புகள் பிரமாண்டமான கடற்கரையாக விரிகின்றன. அவை பிரமாண்டத்திற்கு எழுதப்பட்டவை அல்ல. நகுலன் தனித்த மனதின் குறியீடு. தனித்த மனத்தின் பிரமாண்டத்திற்கு இணையாக வேறொன்றுமில்லை. காற்றைப்போல வெகுளித்தனமாக எல்லா இடங்களையும் நிரப்பிச்செல்லும் மௌனம் அதனுடையது. விரிந்து விரிந்து ஏதுமற்றதாகிவிடாது. உலகத்தின் எல்லாக் கூறுகளையும் தின்று பருத்து விரிந்துகொண்டே போகும். நகுலனின் நாய்கள் அத்தகைய ஒரு விரிவு. தனித்த மனமொன்றின் விரிவு. கோணங்கி சொன்ன அதே பிரமாண்டம் எனக்குள் நிறைகிறது. நாய்கள் எனக்கு பிடிக்காது. இங்கிருக்கும் நாய்கள் எல்லாம் வாய் நிறைய சீழ்வடியத் திரிகின்றன.

(02)

அழுக்கு நிறைந்த உலகம் முழுதும் முற்றுப்பெற்ற கதைகள் மண்ணுக்குள்ளும் முற்றுபெறாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்ற கதைகள்யாவும் நிலத்தின் மேலும் தேவதைக்கதைகள் எல்லாம் வானத்திலும் மிதந்துகொண்டிருக்க, சட்டைப்பைக்குள் ஒரு கதையும் வாய் நிரம்ப புலம்பல்களுடனும் திரியும் எனக்கு இன்னொரு புலம்பலைக் கேட்கும் போது சந்தோஷமாயிருக்கிறது. புரியாத மொழிகளில் கதைகள் நிரம்பிப்போய்க்கிடக்கின்றன. பழுத்த மஞ்சட் சாக்கடை நீர் வடிகின்ற நகரத்தின் நாற்றத்திற்குள் ஊறிப்போய்க்கிடக்கின்ற ஆயிரம் ஆயிரம் துயரக்கதைகளோடு என் கதையும் ஒட்டிக்கொள்கிறது. வெளிச்சம் முழுக்க மீன் விற்றுவிட்டு இருட்டில் தன்னை விற்க காத்திருக்கும் குட்டைப் பாவாடைக்காரியின் சுருக்கு பைக்குள் ஆயிரம் இரவுகளின் கதைகள் நிறைந்திருக்கின்றன. நான் வசிக்கின்ற கட்டடத்தின் ஒவ்வொரு மாடிப் படிகளையும் எத்தனையோ கதைகளை உந்தித்தள்ளிவிட்டு ஏறிமுடிக்கின்றேன். பின்னர் என் கதை எனக்குள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பெருமூச்சொன்றும் விடுகிறேன்.நகுலனின் கதையில் இந்தப் பரபரப்பு இல்லை. யாரோ ஒருவரின் கதையொன்றிற்குள் அந்நியமாய் நின்று எட்டிபார்ப்பதைப்போலில்லை. நிர்வாண நடனமென்றாலும் ஒரு கணம் மனம் பதைபதைத்து குற்றவுணர்வொன்று ஏற்படும். நகுலன்  ரகசிய கதை சொல்லியாயிருந்தாலும் எனக்குள் குற்றவுணர்வில்லை. எளிமையாக உருவாகி விரிகின்ற உரையாடல்களில் அழுத்தமேதுமின்றி இணைத்துக்கொள்கிறேன். இடமழிந்து பொருட்கள், உருவங்கள் அழிந்து உடலழிந்து உயிரும் அதன் எண்ணங்களும் மட்டுமே உரையாடிக்கொள்ளும் வெளி ஒன்றிற்குள் நுழைந்து பேசிக்கொள்வதைப்போல உணர்கிறேன்.

(03)

இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். முள்ளில்லாக் கடிகாரம் காலத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. பின்னிரவில் போத்தலுக்குள் அடைத்து இரவு முழுக்க எரிந்து காலையில் இறந்துபோன மின்மினிப்பூச்சி கடிகாரத்திற்குள் புகுந்து காலத்தை நகர்த்துகிறது. நிறை போதையில் அழுக்கு நிறைந்த குப்பை மேடுகள் மேல் சாரம் கழர தன்னைமறந்து மிதக்கும் குடிகாரர்களை தினமும் சந்திக்கிறேன். உலகத்தின் விளிம்பிலிருந்து விரியும் புனைவுலகத்தின் பேரரசர்களாகத் திரியும் அவர்களின் கனவிலிருந்து என்னறை விரிவது ஆச்சரியமாயிருக்கிறது. பொறுப்பில்லாமல் கீழறைக்குள் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞனின் புகையில் கொஞ்சம் – தனக்கும் தலையணைக்கு உறையில்லாமல் இருபத்தோராயிரத்து தொண்ணூறு இரவுகள் படுத்தெழும்பிக்கொண்டிருக்கும் கிழவனின் நிர்வாணத்தில் கொஞ்சம் – பைத்தியம் பிடித்து இன்னமும் தன் மகளை தேடிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுக் கிழவியின் அலைச்சலில் கொஞ்சமமுமாய்ச் சேர்ந்து என்னறையை விரிகின்றன. நடுச்சாமத்தில் கறுப்புப் பையோடு படியேறிய என்னையொரு பேயென்று நம்பி அறை வரை தொடர்ந்து ஏமாந்துபோகிறது நாய். மின்மினியால் சுழற்றப்படும் இந்தக் காலக்கூட்டின் தொடர்ச்சி அந்த ஏமாற்றத்தாலும் விரிவடையும் என்பதை நாய்  அறியாமலில்லை.

(04)

தோமஸ் நகுலனிற்கும் நண்பராய் இருந்திருக்கிறார் என்றறிந்த  போது அதிர்ச்சியடைந்தேன். தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. தோமஸ் நகுலனிற்கு சுந்தர ராமசாமியின் வடிவத்தை எடுத்திருகிரார். அது நகுலனின் நாவல்கள் நெடுகிலும் வந்திருக்கிறது. நகுலன் ஒரு குட்டி நாயைப்போல தோமஸைப் பின்தொடர்கிறார். நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது. வெளியில் அலைந்து கொண்டிருக்கும் தோமஸிற்குக் கல்லறை எழுப்பியதை எண்ணிப் பார்க்கிறேன். தோமஸ் தன்னை எல்லாக் கணமும் மாயப்பொருளாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அணுக அணுக ஒவ்வொன்றாய் மாறி இறுதி வரை எதுவென்றே தெரியாத அலைகளாய் இருந்திருக்கிறது. அஃறிணை நாடோடி இறந்துபோனதாய் நம்பியதோடு மட்டுமில்லாமல் திவசம் செய்ய விசாரணை நடத்துமளவு என்னை ஏமாற்றியிருக்கிறது. உருவமளவில் என்னை ஏமாற்றியிருந்தாலும் எனக்குள் அது உண்டாக்கிய சிந்தனைகள் உண்மையானவை. ” சிந்தனை என்பது ஒரு வியாதி “என்று தேரை நவீனனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சிந்தனை ஒரு தொற்று வியாதி. ஆதியிலே நிறைந்து போன சிந்தனை காலம் காலமாக தூதுவர்களால் கடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. யாரும் புதிதாக சிந்திப்பது கிடையாது. சிந்தனைகளை ஒன்று சேர்க்கிறார்கள். உடைக்கிறார்கள். பகுக்கிறார்கள். இவற்றையன்றி எதையும் செய்துவிடமுடியாது. தொற்றுவியாதியின் காவி தோமஸ். பரிதாபகரமாக தோமஸ் எல்லாவற்றிக்கும் பொருந்திப்போகிறார்.

(05)

நாய் என்னும் வசை முடிந்த முடிவாயிற்று. ஆனால் சிங்களவர்கள் நாயே என்று யாரையும் திட்டுவதில்லையாம். வசைகள் மட்டுமல்ல எல்லாமே இங்கு முடிந்த முடிவாயிற்று. சமூக அசைவுகள் அனைத்தும் கேள்விகள் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காரணங்கள் எதுவும் இன்றிய மரபு வழி நடைமுறைகள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எல்லோரும் விகுதிகள் தொடர்ச்சியையே விரும்புகிறார்கள். அது எளிமையாயும் சுயநலமாயுமிருக்கிறது. நாய் என்ற வசை விகுதியும் அப்படித்தான். இந்த வசையில் உணர்த்தப்படுகிற நாய் வேட்டை நாயில்லை. வேட்டை நாயிலிருந்து வசைக்குரியவர் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார். நகுலன் நாயிலிருந்து தொடங்கி மனித சமத்துவம் நோக்கி நகர்கிறார். அது இருண்ட குகைக்குள் கூரிய ஒளிப்பொட்டொன்று நகர்வதைப்போல நாவலுக்குள் அசைகிறது.

(06)

நகுலன் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்கிறார். வசனத்தின்  ஒழுக்கொன்றில் கூட சுயபரிசீலனை என்ற வார்த்தை இரைச்சலாகத் தெரிகிறது. நாங்கள் இரைச்சலான எதுவொன்றையும் வெறுக்கிறோம். அதுவும் எங்களுக்குள்ளே இரைச்சலை உருவாக்கிற விஷயங்கள் அறவே பிடிக்காமல் போகிறது. நகுலனின் எல்லா மனிதர்களும் நகுலன் தான். தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிறுத்தி ஒவ்வொரு கணத்திலும் நின்று கேள்வி கேட்கிறார். ஒரு கணத்தில்  நகுலன் என்ற வார்த்தை அற்றுப்போய் நான் புகுந்துகொள்கிறேன். பைத்தியக்கார மனைவியின் கோரப்பிடியிலிருந்து உசும்பியை காப்பாற்ற நான் எத்தனித்ததைப்போல நகுலன் நவீனன் தேரை ஐயர் நாய் பூனை சுசீலா அவர்கள் நீ நான் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஒவ்வொன்றும் நிழல்களாய் அவரைப் பயப்படுத்துகின்றன. நிழல்கள் உண்மையானவை என்றே தோன்றுகிறது. அப்பழுக்கற்ற கருமை. மனிதர்கள் தோரணங்கள் தான். எல்லா நிழல்களும் இயற்கையோடும் ஒளியோடும் எல்லோருக்கும் ஒன்றுபோல மாறுபவை. மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவராக மாறுகிறார்கள். தங்களுக்குள்ளேயே ஆயிரமாய் விரிந்து போய்க்கிடப்பவர்கள். நியத்தில் ஒன்று பன்மையாகி பன்மை ஒன்றாகும் போராட்டம் தான் வாழ்க்கை என்றும் சொல்லிவிடலாம். நாய்கள் பன்மையுடனான மோதல். நேர்கோடுகளை வெறுக்கும் ஒருத்தரின் பன்மைகளோடான அலைச்சல்.

(07)

வாழ்க்கையைப்பற்றி முடிவொன்றெடுத்த அடுத்த நிமிடமே நகுலன், ” ஒரு பீடி நுனியில் தான் என் வாழ்க்கை எரிந்துகொண்டிருந்தது ” என்றார். நான் நகுலனில்லை. எனக்கு பீடி பிடித்து பழக்கமில்லை. நகுலனாயிருந்தால் தானே வாழ்க்கை பீடி நுனியில் எரியவேண்டும். பீடி பிடிக்காத எனக்கு வாழக்கை இல்லையா? இருக்கிறது, நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காலம் காலமாக நம்பப்படுகின்றதைப்போல நான் உயிரோடிருக்கிறேன். எனவே நான் நகுலனில்லை.

(08)

உலகத்தில் இருக்கிற எல்லாவற்றாலும் வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. “நாய்களாலும்”.

(09)

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. நகுலனின் நாய்கள் வாசித்த பகலின் பின்னர்  நீண்ட இரவு வந்தாயிற்று. நீண்ட இரவின் மழை ஓசையில் படிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று சுருண்டு குறண்டிப்போய்க் கிடக்கும் வெள்ளையும் கறுப்பும் கலந்த நாயொன்றும் தனிக்கறுப்பு நாயொன்றும் எனது வருகையை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இளவரசன் போல இரவின் கருமைக்குள் என்னை மறைத்துக்கொண்டு ஓயாமல் ஊற்றிக்கொண்டிருக்கும் மேகக் கிண்ணத்தின் ஏலக்காய்த்தேநீருக்குள் நனைகிறேன். விறைத்த நாய் உடலை சிலிர்ப்பிக்கொள்வதைப்போல மேற்சட்டையினூடாக மார்புக்குள் ஈரம் இறங்கச் சில்லிடுறேன். நாடகமொன்றிற்குள் எல்லா வேஷங்களையுமிட்டு நடிக்கும் அந்தக் கிழவனைப்போல இந்த மழைக்குள் நான் இளவரசனாயும் அந்த தேநீர்க் கடைக்குள் வியாபாரியாயும் தெரு முனையில் உடலை விற்பவனாயும் தொலைதூரத்தில் மறையும் ஜோடிக்கைகளின் குடையாயும் வேஷமிடப்போகிறேன். ஒரு சூறாவளி சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உதிர்ந்த நாயின் இம்மி முடியையும் இந்த உடலுக்குள் தொலைந்துபோன என்னையும் தேட ஒவ்வொரு வேஷமாயிடுகிறேன். நான் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  இத்தனை ஆயிரம் அணுக்களும் எண்ணங்களும் அன்பும் வெறுப்பும்  ஒடுங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பருத்த உடலுக்குள் தொலைந்திருக்கும் நானுக்குள் மீண்டும் இவ்வுடல் ஒடுங்கிப்போவதை தோமஸும் ஏற்றுக்கொள்ளமாட்டான். நகக் கண்ணுக்குள் குளிரிறங்கி விரல்கள் விறைக்கத்தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களும் ஏன் ஆயிரம் கனவுலகவாசிகளுடன் வாழ்கிறேன்?என்றிலிருந்து அவர்கள் எனக்குரியவர்களாகினார்கள்? அவர்கள் என்னும் என்னை ஏன் இன்னமும் அலையவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு முன்னர் பேகன் செய்ததைப்போல என்னை நானே வரைந்து பார்க்கிறேனா? ஆனால் எனக்கு பேகனை இப்போதுதான் தெரியும். நானறியும் போது பேகன் தான் என்னைப்பார்த்து போலச்செய்கிறார். மழைக்குள் ஓவியம் ஒன்று கரைந்து தானற்றுப் போவதைப்போல நானற்றுப்போக இந்த மழைக்குள் நிற்கிறேன். முதலில் நானென்பதென்ன என்று தெரியவேண்டும். ஒவ்வொரு அலைச்சலிலும் ஏதோவொன்றை அடைகிறேன். குறுக்கெழுத்து புதிரொன்றை நிரப்புவதைப்போல வாழக்கையின் கட்டங்களை நிரப்புகிறேன். என்றும் நிரப்பிவிடமுடியாத நீண்ட புதிரென்று தெரிந்தும் ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது. தூரத்தில் இன்னொரு உருவம் தெரிகிறது. முற்றும் நனைந்து போய் விறைத்திருக்கிறது. கிழடாகிப்போனாலும் கண்களில் அதே ஒளியுடன். தன் பாட்டனிடம் அத்திமரத்தடியின் கீழ் விரவிப்போட்ட வைக்கோற் படுக்கையின் மேல் வியந்து கதை கேட்ட அதே கண்கள். யோஸே ஸரமாகோ. தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார். இருட்டும் மழையும் எக்காலமும் முடிந்ததில்லை. எல்லோருக்கும் தெரிவதுமில்லை. நகுலன் இருட்டை மொழி பெயர்கிறார். மழையை மொழிபெயர்கிறார். இருட்டின் கருமையும் மழையின் குளிரும் தாங்கமுடியாமல் மொழிபெயர்த்தழிக்கிறார். அவரின் இருட்டு. அவரின் மழை. அவரின் மொழி. அது எனக்குரியதுமாகிறது. இருட்டில் மறைந்திருக்கிற பாதைகளை வனங்களை மைதானங்களை வயல்வெளிகளை அவ்வொளி  வெளிக்காட்டுகிறது. எதிர் அறைக்குள் குறை பீடி எரிந்துகொண்டிருக்கிறது. என் அறை முழு இருட்டில். நிலம் குளிரில்.

(10) 

” என்னுடைய அபிப்பிராயத்தில் இலக்கியம் என்பது மெய்யான உலகம் என்று நம்மை நம்பச்செய்யும் ஒரு பொய் உலகம் தான்” என்று நகுலன் கூறியதைப்பார்க்க பஷீரின் நாராயணீ தொடங்கி நேற்றுப் பிறந்த மீக்காயீல் வரை குருடரின் கைப்பிரம்பு தான்.

[envira-gallery id="1655"]

256 Views

Facebook Comments

Brinthan

பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top